டெல்லி,மார்ச்.20; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த இழுபறிகள் நீடித்து வந்த நிலையில், தற்போது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு ஒரு தெளிவான முடிவு எட்டப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு மட்டுமின்றி, எந்தெந்த கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, கூட்டணி கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்திலா அல்லது ‘தாமரை’ சின்னத்திலா என்பது விவாதத்தின் மையப்பொருளாக இருந்தது.
யாருக்கு எத்தனை இடங்கள்? (உத்தேச பட்டியல்)
டெல்லி வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவலின்படி, அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பின்வருமாறு:
அதிமுக: 162 தொகுதிகள் (இரட்டை இலை)
பாஜக: 31 தொகுதிகள் (தாமரை)
பாமக: 17 தொகுதிகள் (மாம்பழம்)
அமமுக (டி.டி.வி. தினகரன்): 9 தொகுதிகள் (குக்கர்)
தமாகா (ஜி.கே. வாசன்): 4 தொகுதிகள் (தனிச்சின்னம்)
இந்திய ஜனநாயக கட்சி (IJK): 2 தொகுதிகள் (தாமரை)
புதிய நீதிக்கட்சி: 2 தொகுதிகள் (தாமரை)
புதிய தமிழகம்: 2 தொகுதிகள் (தாமரை)
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: 2 தொகுதிகள் (தாமரை)
இதர கட்சிகள் (பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி): தலா 1 தொகுதி (தாமரை)
புரட்சி பாரதம்: 1 தொகுதி (இரட்டை இலை)
சின்னங்களின் கணக்கு: இரட்டை இலையா? தாமரையா?
இந்தத் தேர்தலில் சின்னங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதன்படி:
இரட்டை இலை சின்னத்தில்: அ.தி.மு.க மற்றும் புரட்சி பாரதம் இணைந்து மொத்தம் 163 பேர் போட்டியிட வாய்ப்புள்ளது.
தாமரை சின்னத்தில்: பாஜக மற்றும் ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் இணைந்து மொத்தம் 41 இடங்களில் களம் இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் தங்களது சொந்த சின்னங்களிலேயே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.
கடந்த 2021 தேர்தலை விட இந்த முறை தொகுதி பங்கீட்டில் பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச பாமக தலைவர் அன்புமணி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பலமான கூட்டணி திமுக கூட்டணிக்கு எத்தகைய சவாலை அளிக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
