Skip to content

டெல்லியில் நாளை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்; ஜனநாயக முறையில் எதிர்ப்பை காட்ட ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

டெல்லி,ஜூன்.05; டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை (ஜூன் 06, 2026) நடைபெறவுள்ள பிரமாண்ட போராட்டத்திற்கு முன்னதாக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தனது ஆதரவாளர்களிடம் சட்டம் ஒழுங்கை முழுமையாகப் பின்பற்றி, அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (ஜூன் 04, 2026) வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சிஜேபி (CJP) செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, வரவிருக்கும் போராட்டம் வன்முறையாக மாறக்கூடும் என்ற ஊகங்களை முற்றிலுமாக மறுத்தார். மேலும், அமைதியான முறையில் போராடுவதில் தங்களது கட்சி உறுதியாக உள்ளது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கல்வித்துறை சீர்கேடு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு

சமூக ஊடகங்களில் ஒரு கிண்டலான இளைஞர் இயக்கமாகத் தொடங்கி, தற்போது ஒரு பெரிய அரசியல் பரப்புரையாக உருவெடுத்துள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மத்திய அரசை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. சமீபத்தில் நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE) மற்றும் ஜேஇஇ (JEE Advanced 2026) போன்ற முக்கிய தேசியத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் தரவு கசிவு போன்ற பிரச்னைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

“இந்த முறைகேடுகள் மாணவர்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் அரசின் தேர்வு மேலாண்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. பொது நிறுவனங்களை வழிநடத்த அறிவியல் மனப்பான்மையும், தொழில்நுட்பத் திறமையும் கொண்ட நபர்கள் தேவை.”

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரிக்கை

மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்துவிட்டதாகக் கூறி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது. சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளரை இடமாற்றம் செய்தது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்றும், ஒட்டுமொத்த கல்வி அமைப்பிலும் ஊழல் மலிந்து கிடப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அமெரிக்காவில் உயர் கல்வி பயின்று வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே நாளை (ஜூன் 06, 2026) காலை டெல்லி வந்தடைவார் என்றும், டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் அனுமதி பெற்ற பிறகு ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதிப் போராட்டத்திற்கு பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கல்வி முறை சீர்கேடுகளுக்கு எதிராக போராடும் சக்தியாக மாறிய சிஜேபி

சமூக வலைத்தளங்களில் வெறும் நையாண்டியாகத் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ இயக்கம், இன்று இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி முறை சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடும் ஒரு முக்கிய இளைஞர் சக்தியாக மாறியுள்ளது.

டெல்லியில் நாளை (ஜூன் 06, 2026) நடைபெறவுள்ள இந்தப் போராட்டம், வன்முறையின்றி முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, அமைதியான முறையில் உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரு ஜனநாயகப் போராட்டமாக இருக்கும் என்று அமைப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *