சென்னை,மே.28; தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாகத் டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ஜோசப் விஜய், தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
டெல்லி பயணத்தின் முக்கிய நோக்கம்
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக முதலமைச்சர் விஜய் நேற்று (மே 27) டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் புதிய திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசுக்கான பல்வேறு கோரிக்கைகள் மற்றும் திட்டங்கள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் விஜய் நேரில் வழங்கினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை
பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனையும் முதலமைச்சர் விஜய் சந்தித்தார். தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதிப் பங்கீடு மற்றும் பல்வேறு மத்திய அரசு நிதியுதவித் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி அவரிடம் மனு அளிக்கப்பட்டது. இச்சந்திப்பு தமிழ்நாட்டின் நிதி நிலையை மேம்படுத்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சோனியா மற்றும் ராகுல் உடனான சந்திப்பு ரத்து
டெல்லி பயணத்தின் இரண்டாம் நாளான இன்று (மே 28, 2026), காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்திப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் பேசப்பட்டது.
அதேபோல், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைப்பார் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் சோனியா மற்றும் ராகுல் காந்தி உடனான இந்தச் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டன. என்ன காரணத்தால் இந்தச் சந்திப்பு ரத்தானது என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியவரவில்லை.
சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய்
தனது 2 நாள் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் விஜய், இன்று (மே 28, 2026) காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் விஜய் மேற்கொண்ட இந்த முதல் டெல்லி பயணம், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான மத்திய அரசின் ஆதரவைப் பெறுவதில் முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உடனான சந்திப்புகள் தமிழ்நாட்டிற்குச் சாதகமான முடிவுகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், காங்கிரஸ் தலைவர்கள் உடனான சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
