Skip to content

தமிழ்நாடு அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு; முதலமைச்சர் விஜய் வசம் 17 இலாகாக்கள்!

சென்னை,மே.16; தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 8 தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்ததால், எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் பல்வேறு விமர்சனங்களை கூறி வந்தனர்.

ஆளுநரை சந்தித்து ஆலோசித்த முதலமைச்சரின் தனிச் செயலர்

இதுபோன்ற சூழலில், முதலமைச்சர் விஜய்யின் தனிச் செயலாளர் செந்தில்குமார் இன்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்துப் பேசினார்.

அப்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் துறைகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதலமைச்சர் விஜய் வசம் 17 துறைகள்

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, முதலமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் பின்வருமாறு;

முதலமைச்சர் விஜய் வசம் – பொதுத்துறை, பொது நிர்வாகத்துறை, உள்துறை, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள் துறை, காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் .

9 அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு

அமைச்சர் செங்கோட்டையன் -நிதித்துறை,

அமைச்சர் C.T.R. நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் நீதித்துறை,

அமைச்சர் அருண்ராஜ் – சுகாதாரத்துறை, மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை

அமைச்சர் என்.ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை,

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா – பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை,

அமைச்சர் கீர்த்தனா -தொழில்துறை,

அமைச்சர் பிரபு – இயற்கை வளத்துறை,

அமைச்சர் ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை,

அமைச்சர் வெட்கடரமணன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை.

ஏற்கனவே அமைச்சராகப் பதவியேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?

கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என தவெகவின் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்திருந்ததன் அடிப்படையில், தேர்தலுக்குப் பின்பு இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எஸ்.பி.வேலுமணி அணி (அதிமுக ): அதிமுக-வில் இருந்து பிரிந்து தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு அமைச்சரவையில் 5 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் எனப் பேசப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திமுக கூட்டணியில் வெற்றி பெற்று, தற்போது தவெக-வுக்கு ஆதரவளித்து வரும் விசிக-வும் அமைச்சரவையில் ஒரு இடத்தை எதிர்பார்ப்பதால், அதுகுறித்த ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *