சென்னை,மே.07; நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை தவெக-வுக்கு இல்லை. இதன் காரணமாக அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென அதிமுகவில் குரல்
இதுபோன்ற சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனக்கோரி அதிமுகவில் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையொட்டி, அதிமுக எம்எல்ஏ-க்களின் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெறவிருந்தது. ஆனால், திடீரென இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த தலைவர்கள் ஆலோசனை
இந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றிருப்பவருமான சிவி.சண்முகத்தின் உறவினர் ஒருவரது வீட்டில் நேற்று காலை தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்எல்ஏ, பவானி தொகுதி எம்எல்ஏ கேசி கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
தவெக-வுக்கு அதிமுக ஆதரவளிக்காது என அறிவிப்பு
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுக பெரிய இயக்கம் என்றும் தவெக-வுக்கு ஆதரவளிக்காது எனவும் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அதிமுக எம்எல்ஏ-க்களை புதுச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்சியமைக்க திமுக, அதிமுக இடையே உயர்மட்ட அளவில் பேச்சு?
இந்தச் சூழலில், புதிய ஆட்சியமைக்க திமுக மற்றும் அதிமுக இடையே உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. நேற்று காலை முதலே கட்சியின் மூத்த தலைவர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்திய நிலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க முனைப்புக் காட்டி வருவதாகத் தெரிகிறது.
அதிமுக-வுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க திமுக முடிவா?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அதிமுகவுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனினும், தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளதால், அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் 5 பேர் தவெக பக்கம் சென்றுவிடுவார்கள்.
அதிமுக கூட்டணி + திமுக கூட்டணி = 121 இடங்கள்
அந்த வகையில் திமுக கூட்டணிக்கு 68 இடங்கள் இருக்கும். அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் மொத்த எண்ணிக்கை 121 ஆகும். பெரும்பான்மையாக ஆட்சியமைத்திட 118 இடங்கள் தேவைப்படும்.
அந்த வகையில், போதிய அளவிலான இடங்களை இந்தக் கூட்டணி கொண்டிருக்கும். இதனால் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.
திமுக வெளியிலிருந்து ஆதரவளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யோசனையை இபிஎஸ்-ம், ஸ்டாலினும் முன்னர் நிராகரித்ததாக தகவல்
முன்னதாக திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்கும் யோசனையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
அதேவேளையில், திமுக தலைவர் ஸ்டாலினிடமும் இதுபோன்ற யோசனை தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தான் மக்கள் அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கொடுத்துள்ளனர், அவர்களே ஆட்சியமைக்கட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக-திமுக கைகோர்த்தால் மக்கள் ஏற்பார்களா?
தமிழ்நாடு அரசியலில் கடந்த அரை நூற்றாண்டாக எதிரெதிர் துருவங்களில் இருந்துவரும் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதை மக்கள் ஏற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவ்வாறு இணைந்து ஆட்சியமைக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் அவர்கள் எப்படி அரசியல் செய்ய முடியும் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
மறு தேர்தல் வந்து தவெக-வுக்கு பெரும்பான்மை கிடைத்தால்…!
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், வேறு சில விசயங்களை திமுகவும், அதிமுகவும் கருத்தில் கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை தமிழக வெற்றிக் கழகத்தால் புதிய அரசு அமைக்க முடியாத பட்சத்தில், ஆறு மாதங்களுக்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
பின்னர் மறுதேர்தல் நடத்தும்போது மக்கள் தவெகவுக்கு பெருவாரியான வெற்றியை கொடுத்தால் என்ன செய்வது என்று அதிமுகவும் திமுகவும் யோசித்திருக்க வாய்ப்புண்டு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
