சென்னை,ஏப்.22; தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரைவத் தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 23, 2026) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி சுமார் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.
பிற்பகல் 1 மணி வரையிலான நிலவரத்தின்படி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 56.59% வாக்குகளும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 60.98% வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 51.36% வாக்குகளும், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 56.24% வாக்குகளும், மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 55.95% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
2026 -பிற்பகல் 1 மணி வரை 54.58%, 2021-ல் பிற்பகல் 1 மணி வரை 37.16%
சென்னை மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 37.16 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஆனால், தற்போது (2026) நடைபெற்று வரும் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள் பின்வருமாறு:
திருப்பூர் – 62.97 விழுக்காடு
நாமக்கல் – 62.51 விழுக்காடு
ஈரோடு – 61.79 விழுக்காடு
சேலம் – 61.42 விழுக்காடு
கரூர் – 60.77 விழுக்காடு
பிற்பகல் 1 மணி வரையிலான நிலவரம்
நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் 1 மணி வரை 56.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் 39.61 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகின. இம்முறை பிற்பகல் 1 மணி வரையிலான நிலவரத்தின் படி சுமார் 16 விழுக்காடு வாக்குகள் அதிகம்.
உதயநிதி, ஓபிஎஸ், அண்ணாமலை, திரைநட்சத்திரங்கள் வாக்கு
சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி தனது குடும்பத்துடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்திலும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையிலும் வாக்களித்தனர்.
சென்னையில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சூரி, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், சாம் சி.எஸ்., இயக்குநர் சங்கர், அவரது மகள் அதிதி, வெங்கட் பிரபு, ரம்யா பாண்டியன், ஆதி, நிக்கி கல்ராணி, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், சூர்யா- ஜோதிகா உள்ளிட்ட பலரும் ஜனநாயக கடமையாற்றினர்.
