சென்னை,மே.10; தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இன்று (மே 10, 2026) முதலமைச்சராகப் பதவியேற்றார். ரசிகர்களின் ஆரவாரம், அரசியல் தலைவர்களின் வாழ்த்துகள் என சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
நேரு விளையாட்டு அரங்கில் வரலாற்று நிகழ்வு
சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் விஜய்க்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். “சி. ஜோசப் விஜய் எனும் நான்…” என்று அவர் முழங்கியபோது அரங்கமே அதிர்ந்தது.
இந்த விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விஜய்யின் புதிய அமைச்சரவை: யார் யாருக்கு இடம்?
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்
அமைச்சர்கள் பட்டியல் பின்வருமாறு;
என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு, கீர்த்தனா ஆகியோர் ஆவர்.
முதல் கையெழுத்து எதற்கு?
பதவியேற்பு விழா மேடையிலேயே புதிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். அதன்படி இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் மின்சாரம் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.
பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு அமைப்பதற்கான கோப்பிலும் விஜய் கையெழுத்திட்டார்.
தமிழ்நாட்டு திரையுலகில் ‘தளபதி’யாக வலம் வந்த விஜய், இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது அவரது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் 13ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் இந்த புதிய பயணம் தமிழ்நாட்டிற்கு எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
