Skip to content

தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர்: ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்! சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிரடி!

டெல்லி,மார்ச்.06: தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

இதுபோன்ற சூழலில், நாட்டின் முக்கிய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு கூடுதல் பொறுப்பில் புதிய ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கேரளா மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (Rajendra Vishwanath Arlekar) தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசுக்கும் ஆர்.என். ரவிக்கும் இடையே நீடித்து வந்த மோதல்களுக்கு மத்தியில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் பதவி விலகல்!

மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து காலியான அந்த இடத்திற்கு ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற மாநிலங்களில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள்

அதிரடி மாற்றத்தின் ஒரு பகுதியாக மேலும் சில மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

டெல்லி: முன்னாள் தூதர் தரஞ்சித் சிங் சாந்து டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லடாக்: டெல்லி துணைநிலை ஆளுநராக இருந்த வினய் குமார் சக்சேனா லடாக்கிற்கு மாற்றப்பட்டார்.

தெலங்கானா: இமாச்சலப் பிரதேச ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா தெலங்கானா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா: தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா மகாராஷ்டிராவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பீகார்: லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அட்டா ஹஸ்னைன் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகாலாந்து: நந்த் கிஷோர் யாதவ் புதிய ஆளுநராக பொறுப்பேற்கிறார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்த மிகப்பெரிய இடமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட்டிருப்பது இங்குள்ள பெரும்பாாலான அரசியல் கட்சிகள் வரவேற்கக்கூடிய முடிவாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *