சென்னை, ஏப்.12; தமிழ்நாட்டில் வருகிற 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 75,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் துணை வாக்குச்சாவடிகளும் அடங்கும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 756 வாக்காளர்கள் என்ற விகிதாச்சாரம்
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்ற விகிதத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் 75,097 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் (SIR) பின்னர் ஒரு வாக்குச்சாவடிக்கு 756 வாக்காளர்கள் என்ற விகிதாச்சாரம் அமைந்துள்ளது.
பூத் சிலிப்-களை வழங்க பிஎல்ஓ-க்களுக்கு உத்தரவு
ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு (BLO -Booth Level Officer) வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்ற வகையில் 75,064 பேர் பணியில் உள்ளனர்.
தற்போது வாக்காளர்களுக்கு அடையாளச் சீட்டுகளை (Booth Slip) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதிய வகை பூத் சிலிப்; கூடுதல் தகவல்களை அறிய கியூ ஆர் கோடு!
இந்த தேர்தலுக்காக புதிய வகை அடையாளச் சீட்டுகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. அதில் அவர்களின் பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்குச் சாவடி எண்ணை எளிதில் காணும் வகையில் கட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த ‘பூத் ஸ்லிப்’பில் QRCode-ம் உள்ளது. இதன் வாயிலாக கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.
வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன் பூத் சிலிப்-களை வழங்கிடுக
இந்த அடையாளச் சீட்டுகளை (Booth Slip) வழங்கும் பணி இன்று (ஏப்ரல் 12, ஞாயிறு) தொடங்கப்பட உள்ளது. BLO அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று இவற்றை வழங்கவிருக்கின்றனர். அவர்கள் தனித்தனியாகச் சென்று இந்த பூத் சிலிப்களை வாக்காளர்களுக்கு வழங்கலாம். உதவிக்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களை அழைத்துச் செல்லலாம்.
வாக்குபதிவுக்கு 5 நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களுக்கும் அடையாளச் சீட்டுகளை (Booth Slip) வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
