சென்னை,மே.26; தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்கவும் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கை; அமைச்சரின் விளக்கம்
தமிழ்நாட்டில் நிலவி வரும் கத்திரி வெயில் மற்றும் கடுமையான வெப்ப அலை காரணமாக, ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இது குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்நாட்டில் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை மற்றும் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும்,” என்று தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் நடத்திய அவசர ஆலோசனை
இதற்கிடையே, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அமைப்பது குறித்து முதலமைச்சர் விஜய், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று (மே 26, 2026) அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெயிலின் தீவிரம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ள சமீபத்திய தகவலின்படி, “தமிழ்நாட்டில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை வெப்பநிலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகுதான் படிப்படியாக வெப்பம் குறையத் தொடங்கும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வானிலை மையத்தின் இந்த அதிகாரப்பூர்வ எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பள்ளிகள் திறப்பைத் தள்ளிப்போடவே தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பள்ளிகள் திறப்பு தேதி எப்போது?
வானிலை அறிக்கையின்படி ஜூன் 4 வரை வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், திட்டமிட்டபடி ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. நம்பகமான வட்டாரங்களின்படி, நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனேகமாக ஜூன் 8-ஆம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தமிழ்நாடு அரசிடமிருந்து வெளியாகும் எனத் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த ஆண்டு ஜூன் முதல் வாரம் வரை வெயில் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மாணவர்களின் நலனே முக்கியம் என்பதால் அரசின் இந்த ஆலோசனையும், சாத்தியமான தள்ளிவைப்பு முடிவும் நல்வரவேற்பைப் பெற்றுள்ளது.
