சென்னை,மார்ச்.29; 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த (ஏப்ரல்) மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் கால அட்டவணை: முக்கிய தேதிகள்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30, திங்கள்) காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை மறுநாள் (ஏப்ரல் 7, 2026) நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு – ஏன்?
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 30, திங்கள்) முதல் ஏப்ரல் 6 வரை 8 நாட்கள் அவகாசம் இருந்தாலும், இடையில் 4 நாட்கள் பொது விடுமுறை வருவதால் வேட்பாளர்களுக்கு வெறும் 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
மார்ச் 31: மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 1: வங்கி கணக்கு முடிவு (Closing)
ஏப்ரல் 3: புனித வெள்ளி
ஏப்ரல் 5: ஞாயிற்றுக்கிழமை
இந்த விடுமுறை நாட்களைத் தவிர்த்து இன்று (மார்ச் 30), ஏப்ரல் 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
ஆன்லைன் மூலம் மனு தாக்கல் செய்ய வசதி
கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் இந்த முறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. வேட்பாளர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வருவதோடு மட்டுமல்லாமல், https://suvidha.cci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாளில் அலைமோத வாய்ப்பு
மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி ‘சுப முகூர்த்த தினம்’ என்பதால், அன்று அதிகப்படியான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க வேட்பாளர்கள் முன்கூட்டியே ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேட்புமனு தாக்கல் எனும் முக்கிய நிகழ்வு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இன்று (மார்ச் 30, திங்கள்) தொடங்கும் வேட்புமனு தாக்கல் நிகழ்வு, இந்தத் தேர்தல் திருவிழாவின் அடுத்த முக்கிய கட்டமாகும். ஜனநாயகக் கடமையை ஆற்ற தமிழ்நாடு தயாராகி வரும் வேளையில், தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
