டெல்லி, டிச.11; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் ஒரு சிறப்பு மற்றும் தீவிரமான வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையாகும். இதில், வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டிப்பாகப் பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை நீக்குதல் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள்
தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப்பட்டியலில் தற்போது அசாம் மாநிலமும் சேர்ந்திருக்கிறது. இதுதொடர்பாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள அசாம் மாநிலத்திற்கு ஜனவரி 1ஆம் தேதி 2026ஆம் ஆண்டு தகுதி தேதியாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
S.I.R பணி மன அழுத்தத்தால் சிலர் தற்கொலை
சில மாநிலங்களில் SIR பணிகளால் மன அழுத்தத்திற்கு ஆளான அரசு ஊழியர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இதனிடையே, SIR தொடர்பாக பீகார், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன.
புதிய வழக்குகள் கிடையாது: ஜனவரி இறுதியில் தீர்ப்பு
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, “SIR விவகாரத்தில் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது. இம்மாதம் வாதங்களை முடித்து, ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளது. முன்னதாக SIR நடைமுறையானது அரசியலமைப்புச் சட்ட மீறல் என்றும், உண்மையான தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போல செயல்படுகிறது என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர். இருப்பினும், உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது நினைவுகூரத்தக்கது. இதனிடையே, தமிழ்நாட்டில் SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் இன்று (11.12.2025) முடிவடையும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் படிவங்களை சமர்ப்பிக்க அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
