Skip to content

தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிகார அத்துமீறல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை,ஏப்,08; தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றிவிட்டு, சாய்குமார் ஐஏஎஸ்-ஐ தலைமைச் செயலாளராக நியமித்திருப்பது பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒருதலைப்பட்சமான நடவடிக்கை

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜக-வை ஆதரித்து பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சாடியுள்ளார்.

தற்போது அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றி, ஒரு தலைப்பட்சமான அத்துமீறிய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கட்டளைகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றுகிறது..!

நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜக ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது; அரசியல் சட்டம் தேர்தல் ஆணையத்திற்கு தந்துள்ள பாதுகாப்பு பாஜகவிற்கு தேர்தல் வேலை பார்ப்பதற்கல்ல; நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பாஜக ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது ஆணையத்தின் கண்ணியத்தை கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பாஜக ஆளும் அஸ்ஸாமில் மாற்றினார்களா?

பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது-அங்கு காவல்துறை தலைமை இயக்குநர், தலைமைச் செயலாளரை மாற்றவில்லை-பாஜக நிழல் ஆட்சி நடத்திய பீகாரில் தேர்தல் நடந்தபோது, அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை- ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கின்றனர் – அவர்களை பாஜகவின் தூண்டுதலின் பேரில் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது என்று ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்பட்ட அரசு தானே மோடி அரசு

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்த பிரதமருக்கோ அவர் வழிநடத்தும் மத்திய பாஜக அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப்போவதில்லை என்பதை தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தலைமைச் செயலாளர் , டிஜிபி ஆகியோரை மாற்ற பாஜக தூண்டிவிடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது – ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகிவிட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன என்றும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் பாஜக மண்ணைக் கவ்வும்

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வியில் மண்ணைக் கவ்வப்போது உறுதி -சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சக்கட்டம் என்று தனது எக்ஸ் தளப்பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *