Skip to content

“தவெகவுடன் கூட்டணி வைக்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி”: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

சென்னை,மே.19; தமிழ்நாடு அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவிற்குள் (ADMK) உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் தொடர் தோல்விகளுக்குப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே காரணம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வந்தவர்களை அவர் அவமதித்து வெளியேற்றினார் என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் தொடர் தோல்விகளும் வாக்கு வங்கி சரிவும்

சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் எம்எல்ஏக்களும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய சி.வி.சண்முகம், “கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதற்கொண்டு, நடந்து முடிந்த தேர்தல் வரை அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. கட்சியின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்கிறது. இந்தத் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, கட்சியை மீண்டும் வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், இளைஞர்களை இயக்கத்தில் அதிகம் சேர்க்க வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்” என்று குறிப்பிட்டார்.

தவெக மற்றும் தேமுதிக கூட்டணிகளை உதாசீனப்படுத்திய இபிஎஸ்

கடந்த 2024 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார். பிரிந்து சென்றவர்களையும், நீக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைத்து ஒற்றை அதிமுகவாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை இபிஎஸ் நிராகரித்ததாக சண்முகம் கூறினார்.

மேலும், கூட்டணி குறித்துப் பேசுகையில் அவர் கூறியதாவது:

“வலிமையான கூட்டணி அமைக்காததே நமது வீழ்ச்சிக்குக் காரணம். நாம் தவெக கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். தவெக தரப்பிலிருந்தும் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேசுவதற்கு நம்மிடம் தூது வந்தார்கள். ஆனால், கூட்டணி பேச வந்தவர்களை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தினார். அவர்களுடன் கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே அவர் குறியாக இருந்து, அவர்களை வெளியேற்றினார்.

அதேபோல, தேமுதிகவையும் ‘அரை பர்சண்ட் கட்சி’ எனக் கூறி கூட்டணியை விட்டு வெளியேற்றினார். டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட எந்தவொரு தலைவரையும் அரவணைக்காமல், தான் மட்டுமே முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு தேர்தலைச் சந்தித்தார்” என இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் அடுக்கடுக்கான புகார்களை வைத்தார்.

‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ – ஓபிஎஸ் விவகாரத்தில் சாடல்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்துப் பேசிய சி.வி.சண்முகம், “எனக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் தேவையில்லை, சாதாரண அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன் என்று ஓபிஎஸ் இறங்கி வந்தபோதும் அவரைச் சேர்த்துக் கொள்ள பழனிசாமி மறுத்துவிட்டார். ஆனால் இப்போது தனது பதவிக்கு ஆபத்து வந்தவுடன், ‘தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்’ என அறிக்கை விடுகிறார். இது கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளது. இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால் பழனிசாமி இன்று முதலமைச்சராக இருந்திருப்பார். கட்சியின் இந்த படுதோல்விக்கு அவரே முழு பொறுப்பு” என்று சண்முகம் விமர்சித்தார்.

சர்வாதிகாரப் போக்கும் மாவட்டச் செயலாளர்கள் நீக்கமும்

கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் 31 மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது சட்டப்படி செல்லாது என்று வாதிட்டார்.

“பொதுக்குழுவைக் கூட்டக் கோரி கையெழுத்திட்டால் பதவி பறிக்கப்படும் என நிர்வாகிகளை அச்சுறுத்துகிறார்கள். இப்படி மிரட்டல் விடுத்தால் கட்சி எப்படி வளரும்? அதிமுக சட்டவிதிகளின்படி, 5-ல் 1 பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பொதுச்செயலாளரிடம் கொடுத்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். ஆனால், இபிஎஸ் சர்வாதிகாரப் போக்குடன் அதனை மறுத்து வருகிறார்” என்று சி.வி.சண்முகம் சாடினார்.

பொதுக்குழுவில் விவாதிக்கத் தயார்!

அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டுமே தங்களின் ஒரே நோக்கம் என்று குறிப்பிட்ட சி.வி.சண்முகம், தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை என்று கூறினார். மேலும், “தேர்தல் தோல்விகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்க உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இரு தரப்பும் பொதுக்குழுவில் கருத்துகளை வைப்போம். அங்குப் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *