Skip to content

“தவெகவை அமமுக ஆதரிப்பதாக ஆளுநரிடம் வழங்கிய கடிதம் போலி” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு; மறுக்கும் விஜய் தரப்பு!

சென்னை,மே.09; சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் 11 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, மன்னார்குடி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அங்கு திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்எல்ஏவாக தேர்வானானர் அமமுகவின் காமராஜ்.

இவர், தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பது போன்ற ஒரு கடிதத்தை அக்கட்சியினர் ஆளுநரிடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

அமமுகவின் ஆதரவுக் கடிதம்; அசலை கேட்ட ஆளுநர்!

அப்போது அமமுக பெயரில் தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ள கடிதத்தின் அசல் எங்கே? என்று ஆளுநர் தரப்பிலிருந்து காமராஜிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய தகவலறிந்ததும், டிடிவி தினகரன் காமராஜை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், இணைப்புக் கிடைக்கவில்லை. பின்னர், தங்கள் கட்சியின் எம்எல்ஏ-வை தன்னால் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவரை காணவில்லை என்றும், குதிரை பேரத்தில் தவெக ஈடுபட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.

தகவலறிந்து ஆளுநர் மாளிகைக்கு வந்த டிடிவி தினகரன்

இதனைத்தொடர்ந்து தினகரன் உடனடியாக புறப்பட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தார். பிறகு எம்எல்ஏ காமராஜும் அங்கு வந்துவிட்டார்.

அங்கு அவர்கள் இருவரும் ஆளுநர் அர்லேகரிடம், காமராஜ் பெயரில் தவெக சார்பில் வழங்கப்பட்ட கடிதம் போலியானது என்று புகார் அளித்தனர்.

தவெக கொடுத்த கடிதம் போலியானது: டிடிவி தினகரன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தனது கட்சி எம்எல்ஏ காமராஜின் பெயரை கொண்ட போலியான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் தவெக சமர்ப்பித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

எங்கள் கட்சியின் எம்எல்ஏ-வின் பெயரில் ஆதரவு கடிதம் வந்துள்ளது. நல்ல வேளையாக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அந்தக் கடிதத்தில் எங்கள் எம்எல்ஏ-வின் கையொப்பம் இருந்துள்ளது. அந்தக் கடிதத்தின் நகல் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல். அதைத்தான் தவெக தரப்பு ஆளுநரிடம் கொடுத்துள்ளது. இது போலித்தனம். தூய சக்தி என்ற பெயரில் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அசல் கடிதம் கேட்கவே அதை கொண்டு வருகிறோம் என கூறிவிட்டுச் சென்றுள்ளனர் என்று தினகரன் தெரிவித்தார்.

நான் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை: காமராஜ்

செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், “நான் பாண்டிச்சேரியில் தங்கி இருந்தேன்; எனது மொபைல் எண்ணுக்கு மாலை 6 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது; உடனடியாக இது தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசி, என்ன செய்யலாம் என முடிவு செய்தோம்; நான் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை;

அந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வந்துள்ளது; நான் பயன்படுத்துவது வாட்ஸ்அப் வசதி இல்லாத போன்; அதனால் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் (டிடிவி தினகரன்) இந்த விவரம் தெரிய வந்ததும் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வருகை தந்து விவரத்தை தெரிவித்தார் என்று அமமுக எம்எல்ஏ காமராஜ் கூறினார்.

நீங்கள் தூயசக்தி என்று எப்படி கூற முடியும்? -டிடிவி தினகரன்

அப்போது தினகரன், “உங்களிடம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும் பெரும்பான்மை இல்லை. நீங்கள் தூய சக்தி; தூய்மையான ஆட்சி கொடுக்க வந்துள்ளீர்கள். நீங்கள் ராவணன், சீதையை கடத்தியது போல மாற்று கட்சியினரிடம் ஆதரவு கோரி வருகிறீர்கள்; அது சட்டப்படி சரியாகவே இருந்தாலும் இதன் பின்னணியில் குதிரை பேரம் நடைபெறவில்லை என எப்படி சொல்ல முடியும்? அப்படி உணர்வதில் ஆளுநர் மற்றும் பலர் எண்ணுவதில் என்ன தவறு உள்ளது?

ஆட்சியமைக்கவே மோசடி கடிதமா? – டிடிவி தினகரன்

ஆட்சி அமைக்கவே இப்படி மோசடி கடிதம் கொடுப்பவர்கள் நாளை ஆட்சி அமைத்த பிறகு என்ன செய்வார்கள்? இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளோம். இது குறித்து மீண்டும் ஆளுநருக்கு நாங்கள் தெளிவுப்படுத்தவிருக்கிறோம் என்றும் தினகரன் தெரிவித்தார்.

இந்நிலையில், ‘டிடிவி தினகரன் தவறான தகவலை தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. தவெக யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை என குற்றச்சாட்டை தவெக மறுத்துள்ளது . அதோடு அமமுக எம்எல்ஏ தனது கைப்பட ஆதரவு கடிதம் எழுதும் வீடியோவையும் தவெக பகிர்ந்துள்ளது.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க தனது கட்சி ஆதரவளிப்பதாகக் கூறி, மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநர் அர்லேகரிடம் டிடிவி தினகரன் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *