சென்னை,மே.13; முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று (மே 13, 2026) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளை நாடிய தவெக
இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கை (118 உறுப்பினர்கள்) இல்லாத நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 5 பேர் திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவிற்கு ஆதரவளித்தனர்.
இதன் மூலம் ஆதரவு எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தபோதிலும், ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது.
இன்றைக்குள் (மே 13) பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), விடுதலைச் சிறுத்தைகள் (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியது.
அதன்படி தவெக-வை ஆட்சியமைக்க அழைத்த பொறுப்பு ஆளுநர் அர்லேகர், மே 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.
விஜய் உள்ளிட்ட 10 பேர் பதவியேற்பு
இதனைத் தொடர்ந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பின்னர் 17ஆவது சட்டப்பேரவை கடந்த 10ஆம் தேதி கூடியது. 11ஆம் தேதி எம்எல்ஏ-க்கள் பதவியேற்றனர்.
சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகரும், துணைத் தலைவராக ரவிசங்கரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைமைக் கொறடாவாக சபரிநாதன் நியமிக்கப்பட்டார்.
அவையில் உள்ள உறுப்பினர்களில் சரிபாதிக்கு மேல் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்
இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று (மே 13) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இன்று பேரவை தொடங்கியதும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தொடக்க உரையில் முதலமைச்சர் விஜய் பேசுவார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் நிகழ்வு நடைபெறும்.
இதில் அவையில் உள்ள உறுப்பினர்கள் கலந்துகொண்டு சரிபாதிக்கு மேல் வாக்களிக்க வேண்டும்.
சி.வி.சண்முகம் தலைமையிலான 30 பேர் தவெகவிற்கு ஆதரவு
குரல் வாக்கெடுப்பு மூலமாகவோ, அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.
அமமுக சார்பில் வெற்றி பெற்ற ஓரே எம்எல்ஏ-வான காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணியாக செயல்படும் 30 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தப்பும் என்று நம்பப்படுகிறது.
தவெக அரசுக்கு எதிராக இபிஎஸ் ஆதரவு குழு
முன்னதாக சி.வி.சண்முகத்தை முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே. நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் குழு அறிவித்துள்ளது.
