சென்னை,மே.25; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் உற்று நோக்கச் செய்துள்ளன. கடந்த 59 ஆண்டுகாலத் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இல்லாத மாற்றமாக, நடிகர் ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. 1952-க்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ள நிலையில், திரைமறைவில் அரங்கேறிய சில பரபரப்பான அரசியல் நகர்வுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
விஜய்யின் த.வெ.க. ஆட்சி அமைப்பதைத் தடுக்க, அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பரம எதிரிகளாக வலம் வந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கைகோர்த்து கூட்டணி அமைக்க முயன்றதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
மாறிய அரசியல் களம்: 74 ஆண்டுகால வரலாறும் விஜய்யின் த.வெ.க. சாதனையும்
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 59 ஆண்டுகளாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வந்தன. 1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார்.
ஆனால், 2024-ல் கட்சி தொடங்கிய நடிகர் ஜோசப் விஜய், வெறும் 2 ஆண்டுகளிலேயே 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார். த.வெ.க-விற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவோடு த.வெ.க வெற்றிகரமாக ஆட்சியை அமைத்துள்ளது.
திரைமறைவில் நடந்த தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி பேச்சு! உண்மையா?
தேர்தல் முடிவுகள் வெளியான மே 4-ஆம் தேதி இரவு முதல் மே 8-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. த.வெ.க-வை ஆட்சியில் அமர விடக்கூடாது என்பதற்காக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் திரைமறைவில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றதாகப் பேசப்பட்டது.
இதனை அ.தி.மு.க அதிருப்தி எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீனும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை மு.க.ஸ்டாலின் தரப்பிலிருந்தோ அல்லது எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தோ இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கப்படாததால், இக்கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சி உண்மைதான் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் விஜய்க்கு ஆதரவளித்ததால் இந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது.
தி.மு.க – அ.தி.மு.க கைகோர்க்கத் துடித்ததன் பின்னணி என்ன?
தேர்தல் பரப்புரையில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்ட ஸ்டாலினும் எடப்பாடியும், த.வெ.க-வை எதிர்க்க ஒன்று சேர நினைத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதன் பின்னணியில் ஒரு மிக முக்கிய காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அரசுக்குக் கடன்கள் ஏதும் இல்லை. ஆனால், 1967-க்குப் பின் வந்த திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களுக்காக வாங்கப்பட்ட கடன்கள் தற்போது இமயமலை போல் உயர்ந்து, சுமார் 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.
கடன் பற்றி வெள்ளை அறிக்கை என்ற தவெகவின் அறிவிப்பால் கலக்கம்
தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள த.வெ.க அரசு, தமிழ்நாட்டின் நிதி நிலைமை மற்றும் கடந்த கால ஆட்சிகள் குறித்து விரைவில் ஒரு ‘வெள்ளை அறிக்கை’ (White Paper) வெளியிடப் போவதாக அறிவித்து, அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன், தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சிக்காலங்களில் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்ட ஐ.ஏ.எஸ் (IAS) மற்றும் ஐ.பி.எஸ் (IPS) அதிகாரிகளை மாற்றிவிட்டு, புதிய அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்தியுள்ளது. இந்த அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முந்தைய ஆட்சிகளில் பல்வேறு துறைகளில் கரைபுரண்டு ஓடிய ஊழல்கள் தோண்டத் தோண்ட வெளியே வரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
வெள்ளை அறிக்கை வரும்போது, பிரமாண்ட ஊழல் பட்டியல் வெடிக்கும்
வெள்ளை அறிக்கை வெளிவரும் போது, இந்த பிரமாண்ட ஊழல் பட்டியல் பூதாகரமாக வெடிக்கும் என்றும், அது தங்களை சட்டரீதியாகப் பாதிக்கும் என்றும் முன்கூட்டியே கணித்ததாலேயே, த.வெ.க-வின் ஆட்சியைத் தடுக்க தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி அமைக்கத் துடித்ததாக அதிரடித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், இரு பெரும் திராவிடக் கட்சிகள் ஒரு புதிய சக்தியைக் கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. த.வெ.க அரசைத் தடுக்க நினைத்த திராவிட கட்சிகளின் வியூகம் தவிடுபொடியாகியுள்ள நிலையில், விஜய் அரசு வெளியிடப்போகும் வெள்ளை அறிக்கை தமிழ்நாடு அரசியலில் எத்தகைய புயலைக் கிளப்பப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
