சென்னை, மார்ச்.31; தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவில் அவர் சமர்ப்பித்துள்ள சொத்து விவரங்கள் தற்போது பொதுவெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 624 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துகளாக 404.58 கோடி ரூபாயும், அசையா சொத்துகளாக 220.15 கோடி ரூபாயும் காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, அவரது வங்கிக் கணக்குகளில் மட்டும் பெரும் தொகை கையிருப்பில் உள்ளது. சென்னை சாலி கிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் 213.36 கோடி ரூபாய் சேமிப்பு வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட கடன்கள்
இந்த பிரமாணப் பத்திரத்தில் விஜய் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கிய கடன்கள் குறித்த விவரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்படி,
மனைவி சங்கீதா: ரூ. 12.60 கோடி
மகன் ஜேசன் சஞ்சய்: ரூ. 8.78 லட்சம்
மகள் திவ்யா சாஷா: ரூ. 4.60 லட்சம்
தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்: ரூ. 3.02 கோடி
தாய் ஷோபா: ரூ. 8.71 லட்சம்
மேலும், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்திற்கு 3 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.
ஆடம்பர கார்கள் மற்றும் தங்க நகைகள்
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய்யிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் உள்ளன.
பிஎம்டபிள்யூ i7 (BMW i7) : ₹2.00 கோடி
டொயோட்டா லெக்சஸ் (Toyota Lexus) : ₹3.01கோடி
டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) : ₹1.63 கோடி
இவை தவிர 883 கிராம் தங்க நகைகள் (மதிப்பு ₹1.20 கோடி) அவரிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் மற்றும் கல்வித் தகுதி
2024-25 நிதியாண்டில் விஜய்யின் மொத்த வருமானம் 184.53 கோடி ரூபாய் என வருமான வரித் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது கல்வித் தகுதி குறித்துக் குறிப்பிடுகையில், 1992-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி (B.Sc) படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டதாக (Dropped out) விஜய் தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் எதுவும் இல்லை
தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கும் விஜய், தனது நிதி நிலை பற்றிய விவரங்களை தாக்கல் செய்துள்ளார். தமக்கு வங்கிக் கடன்கள் அல்லது நிதி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள் எதுவும் (Zero Liabilities) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பெற்றோர், மனைவி, மக்களுக்கு கொடுத்த பணத்தை கடனாக காட்டியிருப்பது விஜய்யின் மோசமான குணத்தை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
