ராமநாதபுரம், மார்ச்.22; தேர்தல் செல்வாக்கிற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக ராமநாதபுரம் மாவட்ட தவெக நிர்வாகி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தீவிரமாக களமாடத் தொடங்கிவிட்டன. அதன்படி, அரசியலுக்கு புதிதான தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒரு சில இடங்களில் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டனர்.
பரப்புரையில் சிறுவர்கள்: நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சுமைதாங்கி கிராமத்தில் தவெகவினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா உள்ளிட்ட சிலர் சிறுவர்களை அழைத்து வந்து அவர்களுக்குக் கட்சியின் துண்டு மற்றும் கொடிகளைக் கொடுத்துப் பரப்புரையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை
தேர்தல் நேரங்களில் குழந்தைகளையோ அல்லது பள்ளி மாணவர்களையோ அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி கடும் குற்றமாகும். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருஉத்தரகோசமங்கை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியாண்டி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக தவெக கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயமாலா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், சிறார் நீதி சட்டம், தேர்தல் செல்வாக்கிற்காக குழந்தைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘திமுக ஒரு தீய சக்தி’ என சிறுவர்களை வைத்து கோஷம்
இந்தப் பரப்புரையின் போது, ‘ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி’ என சிறுவர்களை கோஷமிட வைத்து பரப்புரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏற்கனவே தனது மாநாட்டில் இத்தகைய அரசியல் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தற்போது மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் அதே பாணியைப் பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், சிறுவர்களை இதற்கு பயன்படுத்தியது பெரும் சட்டச் சிக்கலை உருவாக்கியுள்ளது.
அரசியலுக்குப் புதிதான தவெகவினர் தேர்தல் நடத்தை விதிகள் பற்றி அறிந்திராததால், சிறுவர்களை தேர்தல் செல்வாக்கிற்காகப் பயன்படுத்தி சிக்கலில் மாட்டியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
