தாம்பரம்,மார்ச்.31; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தாம்பரம் தொகுதி திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக வேட்பாளர் மாற்றம்; தொண்டர்கள் அதிர்ச்சி
தாம்பரம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருப்பவர் எஸ்.ஆர்.ராஜா. நீண்டகாலமாகத் தொகுதியில் செல்வாக்கு பெற்ற அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தலைமை இந்த முறை அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அவருக்குப் பதிலாக, புதுமுகமான மருத்துவர் கிருத்திகா தேவி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள், கட்சித் தலைமைக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். முற்றுகைப் போராட்டங்கள் மற்றும் சாலை மறியல் போன்ற சம்பவங்களால் தாம்பரம் திமுகவில் பதற்றமான சூழல் நிலவியது.
ஆ.ராசா மற்றும் உதயநிதியின் சமாதான முயற்சி
நிலைமை கைமீறிச் செல்வதைத் தடுக்க, திமுகவின் மூத்த தலைவரும் எம்.பி-யுமான ஆ.ராசா நேரடியாகத் தாம்பரம் வருகை தந்தார். எஸ்.ஆர்.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். “கட்சித் தலைமை அறிவித்துள்ள வேட்பாளரின் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும்” என அவர் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஆர்.ராஜாவிடம் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகத் தெரிகிறது. “நான் நிறுத்திய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு” என அவர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, நிலைமை சற்று தணிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய வேட்பாளர் மருத்துவர் கிருத்திகா தேவி, எஸ்.ஆர்.ராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
நீறு பூத்த நெருப்பாகத் தொடரும் அதிருப்தி
தலைமையின் தலையீட்டால் மேலோட்டமாகச் சமாதானம் ஏற்பட்டது போல் தெரிந்தாலும், உள்ளூர் திமுகவினரிடையே இன்னமும் “நீறு பூத்த நெருப்பாக” அதிருப்தி புகைந்து கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் புதுமுகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது கட்சித் தொண்டர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பூசலை சாதமாக்கிக்கொள்ள எதிர்க்கட்சிகள் வியூகம்
இந்த உட்கட்சிப் பூசலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. தாம்பரம் தொகுதியின் தேர்தல் முடிவுகளில் இந்த அதிருப்தி எதிரொலிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக தலைமை தனது கோட்டையான தாம்பரத்தில் எழுந்துள்ள இந்த அதிருப்தியை முழுமையாகச் சரிசெய்யுமா அல்லது இது வாக்குகளைப் பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேட்பாளர் கிருத்திகா தேவி, தொண்டர்களை அரவணைத்துச் செல்வதில்தான் அவரது வெற்றி வாய்ப்பு அடங்கியுள்ளது.
