Skip to content

திமுகவை ஆதரித்து கமல்ஹாசன் இன்று 5 தொகுதிகளில் பரப்புரை; கொளுத்தும் வெயிலையும் மிஞ்சும் தேர்தல் கள அனல்!

சென்னை,ஏப்.20; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் முடிவுக்கு வருவதால், வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

கமல்ஹாசன் இன்று 5 தொகுதிகளில் தீவிர பரப்புரை

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஏப்ரல் 20, 2026) ஐந்து தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று 5 தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ், கே.என்.நேரு, இனிகோ இருதயராஜூக்கு ஆதரவு கோருகிறார்

அதன்படி, திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து அரியமங்கலம் காவல் நிலையம் அருகில் மாலை 4 மணிக்கு கமல்ஹாசன் வாக்கு திரட்டுகிறார்.

லால்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பாரிவள்ளலை ஆதரித்து மாலை 5 மணிக்கு பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் துரைராஜ்-க்கு ஆதரவாக ராஜகோபுரம் அருகில் மாலை 6 மணிக்கு வாக்கு சேகரிக்கிறார்.

பிறகு இரவு 7 மணிக்கு, திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிக்கிறார்.

இரவு 8 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜுக்கு ஆதரவாக கமல்ஹாசன் வாக்கு திரட்ட உள்ளார்.

கமல்ஹாசனின் பரப்புரையை ஒட்டி, இந்த 5 தொகுதிகளிலும் அவரை வரவேற்க மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *