Skip to content

திமுக அரசு கஜானாவை துடைத்து வைத்துச் சென்றுள்ளதா? முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!

சென்னை,மே.11; எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆறம்பிக்காதீர்கள், அதெல்லாம் இருக்கு, மக்களுக்குக் கொடுக்க மனதும் ஆட்சித் திறமையும் தான் வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வாழ்த்துக்கூறி ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்னைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்;

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்ளேயே கடன் அளவு

‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ – என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது;

தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம்; அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுக

“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள்; கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்; வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்;

தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *