கோவை,ஜூன்.11; திமுக கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் விலகிவிட்டதாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 75 ஆண்டுகால திராவிடக் கட்சியான திமுகவையும். அரை நூற்றாண்டு கால கட்சியான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி அரசியல் களத்தின் புதிய வரவான தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
சரியான நேரத்தில் கைகொடுத்த இடதுசாரி கட்சிகள்
இதன்பிறகு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதிலிருந்து விலகி முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரக்கரம் நீட்டியது. பின்னர் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளித்தன.
இதன் காரணமாக பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் தாண்டியதை அடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை: மு.வீரபாண்டியன்
இதுபோன்ற சூழலில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “தமிழ்நாடு அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது; உள்ளாட்சி, மக்களவைத் தேர்தலின் போது விவாதித்து யாருடன் கூட்டணி என முடிவெடுப்போம். திமுக கூட்டணியில் இப்போதுள்ள சூழலில் இடம்பெற இயலாது” என தெரிவித்தார்.
வரும் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை நிகழ்வுகள் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும்; தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் இறையாண்மைக்கும் முந்தைய ஆளுநர் செவிமடுக்கவில்லை; தற்போதைய ஆளுநரும் அதே பாதையில் செயல்படக் கூடாது என வலியுறுத்தினார்.
“வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்க”
கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை தமிழ்நாடு முதலமைச்சர் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; இதற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்; ஏற்கெனவே கிடப்பில் உள்ள நிதியையும், முதலமைச்சர் விஜய் கேட்கின்ற நிதியையும் ஒன்றிய அரசு அளிக்க வேண்டும்; இருமொழி கொள்கையில் கடந்த ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தது போல, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் உறுதியாக இருக்க வேண்டும்; சிறு, குறு தொழில்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என வீரபாண்டியன் கேட்டுக் கொண்டார்.
5 தொகுதி இடைத்தேர்தல்; யாருடன் அணி சேருவது?
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூடி ஆலோசித்து அப்போதைய சூழலுக்கேற்ப, யாருடன் அணி சேருவது என முடிவெடுப்போம்; தற்போது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகிவிட்டது; திமுகவும் இண்டியா கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என அறிவித்துவிட்டது; வேறு சில கட்சிகளும் தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது;
ஒரே ஒரு பகை முரண் ஆர்எஸ்எஸ், பாஜகதான்: மு,வீரபாண்டியன்
திமுக, அதிமுக, தவெக ஜனநாயக சக்திகள். நாட்டு நலன் கருதி, அவர்களுடன் இணைந்து எங்களால் பணியாற்ற முடியும். எங்களுக்கு ஒரே ஒரு பகை முரண் ஆர்எஸ்எஸ், பாஜகதான். மற்றபடி தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியுடனும் எங்களுக்கு பகை முரண் இல்லை.
இடதுசாரி அமைப்புகளில் முக்கிய முடிவுகளை எடுக்க பல்வேறு குழுக்கள் உள்ளன. எனவே தவெக அரசுக்கு ஆதரவளிக்க நாங்கள் தான் கூறினோம் என முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கக் கூடாது, அது தவறு. திமுகவுடன் இப்போது ஒரு கூட்டணி சூழல் இல்லை. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கிறோம்.
இடதுசாரிகளை யாரும் அழிக்க முடியாது: வீரபாண்டியன் உறுதி
தமிழ்நாடு அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது. உள்ளாட்சி, மக்களவைத் தேர்தலின் போது விவாதித்து யாருடன் கூட்டணி என முடிவெடுப்போம். எப்போதும் நாங்கள் ஜனநாயக சக்திகளுடன் கைகோப்போம். திமுக, அதிமுக, தவெகவை ஜனநாயக சக்தியாகவே எப்போதும் பார்க்கிறோம். திமுக கூட்டணியில் இப்போதுள்ள சூழலில் இடபெற இயலாது.
உழைக்கும் மக்கள் இருக்கும் வரை இடதுசாரிகளை யாரும் அழிக்க முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்காவிட்டாலும், தெருக்களில் எங்கள் குரல் ஒலிக்கும். முதல்வர் விஜய் பத்திரிகை, ஊடகங்களை சந்தித்து கருத்துகளை பேச வேண்டும், அதுவே ஜனநாயகம். தமிழ்நாட்டில் எந்த தொலைக்காட்சியையும் இருட்டடிப்பு செய்து முடக்கக் கூடாது. யூடியூபர்கள் யாரையும் கைது செய்யக் கூடாது. யாரேனும் வரம்பை மீறினால் சட்ட நடவடிக்கை மட்டுமே எடுக்கலாம்” என்று மு.வீரபாண்டியன் கூறினார்.
