Skip to content

திமுக கூட்டணியில் தொகுதிப் பட்டியல் இழுபறி ஏன்? பின்னணியில் இருக்கும் அரசியல் பரபரப்பு!

சென்னை,மார்ச்.28; தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் (மார்ச் 30, 2026) தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி முடிவடைகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டது அதிமுக

அதிமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்ட நிலையில், திமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகிவிட்டன.

திமுக கூட்டணியில் 3 கட்சிகளுடன் நீடிக்கும் பிணக்கு

காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்வதில் அக்கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது.

அதன்படி திமுக ஒதுக்கிய 23 தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், எஞ்சிய 5 தொகுதிகள் தொடர்பாக இருகட்சிகளுக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது.

23 தொகுதிகள் ஓகே… எஞ்சிய 5 தொகுதிகள் தான் பிரச்னை

திமுக ஒதுக்கிய தொகுதிகளுக்கு மாற்றாக வேறு தொகுதிகளை காங்கிரஸ் கோரி வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற ஸ்ரீவைண்டம், கிள்ளியூர் ஆகிய 2 தொகுதிகளில் இம்முறை திமுக போட்டியிட விரும்புகிறது.

ஆனால், இந்த 2 தொகுதிகளையும் விட்டுத்தர காங்கிரஸ் தயாராக இல்லை. இதன் காரணமாக காங்கிரஸ் உடனான தொகுதிப் பட்டியலை இறுதி செய்வதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

ரிஷிவந்தியம், விருகம்பாக்கம் தொகுதிகள் -பிரேமலதா பிடிவாதம்!

தேமுதிகவைப் பொறுத்தவரையில் விஜயகாந்துக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுத்தந்த ரிஷிவந்தியம் தொகுதியை விருப்பப் பட்டியலில் பிரேமலதா கேட்டுள்ளார்.
இதேபோன்று தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி 2011ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்ற விருகம்பாக்கம் தொகுதியை அவருக்காக பெற வேண்டும் என்பதில் பிரேமலதா உறுதியாக உள்ளார்.

ரிஷிவந்தியம் உள்ளிட்ட 3 தொகுதிகளை விட்டுத்தர திமுக தயக்கம்

மேலும், தான் பிறந்த ஊரான ஆம்பூர் தொகுதியையும் பெற்றுவிட வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக இருக்கிறார்.

ஆனால், இந்த 3 தொகுதிகளும் திமுகவுக்கு பலம் வாய்ந்தவை என்பதால், விட்டுக்கொடுக்க அக்கட்சி தயங்குகிறது.

தொகுதி குறைந்ததால் மா.கம்யூனிஸ்ட் அதிருப்தி

தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைவிட தங்களுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி இன்னும் நீங்கியபாடில்லை. இதனால் தொகுதிப் பட்டியலில் திமுகவுக்கு செல்வாக்கு உள்ள இடங்களை பெற்றுவிட வேண்டும் என அக்கட்சி முனைப்புக் காட்டுகிறது.

இந்த 3 காரணங்களால் தான் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் தாமதம் நிலவுகிறது.

இன்று சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, பட்டியல் வெளியாக வாய்ப்பு?

அனைத்துக் கட்சிகளுடன் சுமுக முடிவு ஏற்பட்டு திமுக வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உடன்பாடு முடிவுக்கு வராததால், வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முடிவை திமுக கைவிட்டது.
இன்று சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *