ஒசூர்,ஏப்.19; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டிள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு மாற்றாக வாக்களிப்பது மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பதற்கு சமம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் ஆவேசமாகப் பேசினார்.
தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க திமுகவால் மட்டுமே முடியும் என்பதைத் தான் நிரூபித்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பாஜக ஒரு அழிவு சக்தி என கடுமையான விமர்சனம்
தனது உரையில் பாஜகவை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர், “பாஜக ஒரு அழிவு சக்தி. அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த மாநிலத்தில் நுழைந்தாலும், அந்த மாநிலம் உருப்பட்டதாகச் சரித்திரமே இல்லை. உத்தரப்பிரதேசம், பீகார், மணிப்பூர் போன்ற மாநிலங்களே அதற்குச் சாட்சி. தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டி குளிர்காயப் பார்க்கும் பாஜகவை உள்ளே விட்டால், மாநில உரிமைகளும் மாநிலக் கட்சிகளும் இருக்காது” என்று எச்சரித்தார்.
திமுகவின் திராவிட மாடல் 2.0
முந்தைய நான்கு ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி ஒரு திட்டத்தைக் கூட உருப்படியாகச் சொல்ல முடியாது என விமர்சித்த ஸ்டாலின், திமுக அரசு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்குமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சிக்குத் தயாராகிவிட்டதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு விடுத்த முக்கிய வேண்டுகோள்
“திமுக கூட்டணியைத் தவிர்த்து நீங்கள் வேறு யாருக்கு வாக்களித்தாலும், அது நேரடியாக பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான். பாஜக ஆட்சிக்கு வந்தால், திமுக கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படும். இந்தித் திணிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை மூலம் தமிழர்களின் அதிகாரத்தைப் பறிக்க அவர்கள் முயல்கிறார்கள். எனவே, மக்கள் விழிப்புடன் வாக்களிக்க வேண்டும்” என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பிய ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், சமூக நீதியையும் காக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே சரியான முடிவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் அழுத்தமாகப் பதிவு செய்தார். தேர்தல் நெருங்கும் வேளையில், அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
