டெல்லி,ஜூன்.09; மத்தியில் அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், மேற்கு வங்கத்தின் ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில் (TMC) ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் எம்பிக்களின் கிளர்ச்சி தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இன்று (ஜூன் 09, 2026) செய்தியாளர்களை சந்தித்த மக்களவை திரிணாமூல் காங்கிரஸ் தலைமைக் கொறடா கல்யாண் பானர்ஜி மற்றும் எம்பி கீர்த்தி ஆசாத் ஆகியோர், அதிருப்தி எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
மோடியை தலைவராக ஏற்றனர்: கல்யாண் பானர்ஜி குற்றச்சாட்டு
நேற்றைய தினம் (ஜூன் 08, 2026) திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சில எம்பிக்கள், பாஜகவின் மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பூபேந்திர யாதவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பை சுட்டிக்காட்டி பேசிய கல்யாண் பானர்ஜி பின்வருமாறு கூறினார்:
“இன்று அவர்களின் தலைவராக நரேந்திர மோடி மாறிவிட்டார். அவர்கள் முழுமையாக பாஜகவினராகவே மாறிவிட்டார்கள். கட்சியை விட்டு வெளியேற அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆனால், அவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் ‘டிஎம்சி எம்பி’ அல்லது ‘டிஎம்சி தலைவர்’ என்று பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
20 எம்பிக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு?
மேலும், மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸின் 20 அதிருப்தி எம்பிக்கள் தனிக் குழுவாக பிரிந்து சென்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்தும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிருப்தியாளர்கள் கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், “அவ்வளவு நேர்மை இருந்தால் அந்த கடிதத்தை ஏன் இன்னும் பொதுவெளியில் வெளியிடவில்லை?” என்றும் கல்யாண் பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
அரசியலில் ஒழுக்கமில்லை என கல்யாண் பானர்ஜி குற்றச்சாட்டு
கட்சியின் அதிருப்தி குழுவிற்கு பாராசத் தொகுதி எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் தலைமை தாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பேசிய கீர்த்தி ஆசாத், “ககோலி கோஷ் ஐந்து முறை தேர்தலில் தோற்றபோதும் மம்தா பானர்ஜி தான் அவருக்கு எம்பி வாய்ப்பு தந்தார். தற்போது அவர் மாநில மற்றும் மத்திய அரசின் பாதுகாப்பை பெற்றுக்கொண்டு, சொந்த கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களையே குறிவைக்கிறார்” என்று வசை பாடினார்.
சமீபத்தில் கட்சியின் மீது அதிருப்தி அடைந்து தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்த சுகேந்து சேகர் ராயை சுட்டிக்காட்டிய கல்யாண் பானர்ஜி, அதிருப்தி எம்பிக்களுக்கு சவால் விடுத்தார்:
கட்சி மீது அதிருப்தி இருந்தால், எம்பி பதவியிலிருந்து விலகிடுக: கல்யாண்
கட்சியின் மீது ஏதேனும் குறைகள் இருந்தால், சுகேந்து சேகர் ராயைப் போல எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் ஒழுக்கத்தை காட்ட வேண்டும். தைரியமிருந்தால் எம்பி பதவிகளை துறந்துவிட்டு, மீண்டும் பாஜக சின்னத்தில் நின்று வெற்றி பெற்று காட்டட்டும்.
தேர்தல் முடிவுகள் வரும் வரை மம்தா பானர்ஜியை புகழ்ந்துவிட்டு, இப்போது துரோகம் செய்வது ஏற்புடையதல்ல என்றும் கல்யாண் பானர்ஜி விமர்சித்தார்.
அமித் ஷா மீது நேரடி குற்றச்சாட்டு
இந்த செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதும் கல்யாண் பானர்ஜி நேரடி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். எம்பி யூசுப் பதான் தன்னிடம் பேசியதாக குறிப்பிட்ட கல்யாண் பானர்ஜி, எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவும், திரிணாமுல் காங்கிரஸை உடைக்கவும் அமித் ஷா பின்னணியில் இருந்து செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
பாஜக-விடம் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய முகமைகள் இருக்கலாம், ஆனால் எங்களிடம் ‘மா, மாட்டி, மனுஷ்’ (தாய், மண், மக்கள்) மற்றும் உண்மையான தொண்டர்களின் பலம் உள்ளது என்று அவர் சூளுரைத்தார்.
கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால் திரிணாமூல் காங்கிரசுக்கு பின்னடைவு
மேற்கு வங்க அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த எம்பிக்களின் பிளவு திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், “துரோகிகள் வெளியேறுவது கட்சிக்கு நல்லதுதான், இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை; மம்தா பானர்ஜியின் தலைமையின்கீழ் இயங்கும் தொண்டர்கள் என்றும் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவார்கள்” என்று டிஎம்சி தலைமை தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
வரும் நாட்களில் இந்த 20 எம்பிக்களின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசியல் களம் நகரும்.
