Skip to content

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஆய்வு; தரவுகளை திரட்டிய தொல்லியல் துறை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு இன்று (10.12.2025) ஆய்வு செய்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, கார்த்திகை தீபத்தன்று மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகார வழக்கு…

அந்த உத்தரவைப் பின்பற்றி கடந்த 3ஆம் தேதி தீபம் ஏற்றப்படவில்லை. அன்றைய தினம் தீபம் ஏற்ற ஏராளமானோர் அங்கு சென்றனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, அரசுத் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மலை உச்சியில் தொல்லியல் துறையினர் ஆய்வு

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லி்யல் துறையைச் சார்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் இன்று (10.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஆய்வு 3 மணி நேரத்திற்கு நடைபெற்றது. இந்த ஆய்வில் விசாரணைக்கு தேவையான தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தூணில் தீபம் ஏற்றக்கோரிய வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *