திருவெறும்பூர் தொகுதி எண் -141
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் தொகுதி இதுவரை 13 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.
இதில் திமுக ஆறு முறையும், அதிமுக நான்கு முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் மற்றும் தேமுதிக தலா ஒரு முறை வென்றன. தமிழ்நாட்டில் ஜனநாயக மாதர் சங்கத்தை தோற்றுவித்தவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த பாப்பா உமாநாத் ஒரு முறை வென்றுள்ளார்.
திமுகவில் அன்பில் மகேஷ்-க்கு தான் மீண்டும் வாய்ப்பு
திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர், பட்டியலினத்தவர், சோழிய வெள்ளாளர், யாதவர், முத்தரையர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என பல சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.
தற்போது அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குதான் திமுகவில் மீண்டும் சீட் கிடைக்கும் எனப் பேசப்படுகிறது. அதேவேளையில், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரனும் சீட் கேட்கிறார்.
அதிமுகவில் சீட் கேட்போர் பட்டியல் மிகப்பெரிது!
அதிமுகவைப் பொறுத்தவரையில், புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், புறநகர் தெற்கு மாவட்ட ஜெ.பேரவைச் செயலர் சூரியூர் ராஜா என்கிற மணிகண்டன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.ராவணன், கூத்தப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகரச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன் என சீட் கேட்போரின் பட்டியல் நீள்கிறது.
தொகுதியில் நடக்கும் நல்லது, கெட்டது என அனைத்திலும் கலந்து கொள்வது, பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட செல்வாக்கு போன்றவை அன்பில் மகேஷ்-க்கு பிளஸ் பாயிண்ட்கள்.
அன்பில் மீது சில அதிருப்திகள் உண்டு, ஆனாலும் வெற்றி வாய்ப்பு….
ஆனால், இன்னும் சில திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம் என மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அங்கலாய்ப்பு, கட்சியினரிடம் நெருக்கம் காட்டாதது அவருக்கு மைனஸ்.
அதேவேளையில், அதிமுக பலவீனமாக இருப்பது அன்பிலுக்கு சாதகம். கடந்த தேர்தலில் அன்பில் மகேஷ்க்கு 1,05,000 வாக்குகள் கிடைத்தன. அதிமுகவின் ப.குமார் 56,000 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் சோழசூரன் 16,000 வாக்குகளைப் பெற்றார்.
இம்முறை தவெகவின் வருகையால் அன்பில் மகேஷ்க்கு வாக்குகள் குறையும் எனக் கணிக்கப்படுகிறது. ஆனாலும், தற்போதைய சூழலில் உதயசூரியனே பிரகாசிக்கிறது.
