Skip to content

தூத்துக்குடியில் பரபரப்பு; தவெக வேட்பாளர் பரப்புரையில் ரகளை – அஜிதா ஆக்னல் உள்பட 6 பேர் மீது வழக்கு!

தூத்துக்குடி,ஏப்.16; தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திமுக-வில் அண்மையில் இணைந்த அஜிதா ஆக்னல் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பரப்புரை வாகனத்தை மறித்து மிரட்டல்

தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீநாத்தை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லயன்ஸ் டவுன் பகுதியில் ஆட்டோ மூலம் பரப்புரை மேற்கொண்டபோது, அங்கு வசிக்கும் அஜிதா ஆக்னலின் வீட்டின் அருகே மோதல் வெடித்தது.

அஜிதா ஆக்னலின் ஆதரவாளர்களுக்கும், தவெக-வினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. பரப்புரை வாகனத்தை மறித்து, அதில் இருந்தவர்களை மிரட்டி தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

அஜிதா ஆக்னல் பின்னணி

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் அஜிதா ஆக்னல். அண்மையில், கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தவெக-வில் இருந்து விலகினார். பின்னர் கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் அதிரடி நடவடிக்கை

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வக்கீல் ஜேசுதாஸ் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அஜிதா ஆக்னல், ஜோன்ஸ் மற்றும் அடையாளம் தெரிந்த மேலும் 4 பேர் என மொத்தம் 6 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம்

தேர்தல் நேரத்தில் மாற்றுக் கட்சி வேட்பாளரின் பிரசாரத்தைத் தடுத்து நிறுத்திய சம்பவம் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்க போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *