Skip to content

தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு கோவை பொறுப்பு வழங்கியது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

கரூர்,ஏப்.01; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மற்றும் கோவை மாவட்ட தேர்தல் வியூகங்கள் குறித்து அவர் பகிர்ந்த தகவல்கள் பேசுபொருளாகி இருக்கிறது.

கரூரில் திராவிட மாடல் சாதனைகள்

கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க அரசு வழங்கியுள்ளதாக முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் இந்த ஸ்டாலின் செய்துள்ளான்” என்று குறிப்பிட்ட அவர், திராவிட மாடல் ஆட்சியின் வேகத்தை ‘சூப்பர் பாஸ்ட் எஞ்ஜின்’ என்று வர்ணித்தார்.

செந்தில் பாலாஜி மீதான நம்பிக்கை

கரூர் ராயனூர் பகுதியில் இன்று (ஏப்ரல் 1, புதன்) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர், கரூர் மாவட்டத்தின் வெற்றியைப் பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்று கூறினார். “கரூர் செந்தில் பாலாஜியின் கோட்டை. இங்கு 100 சதவீத வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அந்த நம்பிக்கையில்தான், கோவையிலும் வெற்றியை நிலைநாட்ட அவருக்கு அங்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கமளித்தார்.

எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனம்

அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வுகளை நகைச்சுவையுடன் ஒப்பிட்டுப் பேசினார். பாஜக அரசு தமிழ்நாட்டைப் பழிவாங்குவதாகவும், அதிமுக தற்போது அமித்ஷாவின் பிடியில் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“இந்த முறை கரூரும் நமது கையில், கோவையும் நமது வசமே” என்று சூளுரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026 தேர்தலில் திமுக-வின் வெற்றிப் பயணம் தொடரும் என்பதை உறுதிப்படத் தெரிவித்தார். அமைச்சர்களின் திறமை மற்றும் மக்கள் நலத்திட்டங்களே திமுக-வின் பெரும் பலமாகத் திகழ்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *