Skip to content

தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வி; தவெகவின் கோட்டையாக மாறிய சென்னை!

சென்னை,மே.05; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தோல்வியடைந்த அமைச்சர்கள் யார் யார்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), அமைச்சர்கள் துரைமுருகன் (காட்பாடி), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), தா.மோ. அன்பரசன் (ஆலந்தூர்), செஞ்சி மஸ்தான் (செஞ்சி ), மதிவேந்தன் (ராசிபுரம் -தனி), எஸ்.முத்துசாமி (ஈரோடு மேற்கு), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்), டிஆர்பி ராஜா (மன்னார்குடி), கீதா ஜீவன் (தூத்துக்குடி), சா.மு.நாசர் (ஆவடி), மூர்த்தி (மதுரை கிழக்கு), பி.டி.ஆர்,. பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி), ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), ராஜேந்திரன் (சேலம் வடக்கு) கே.ஆர்.பெரியகருப்பன் (திருப்பத்தூர்) ஆகியோர் தோல்வியடைந்த அமைச்சர்கள் ஆவர். இவர்களில் கே.ஆர்.பெரியகருப்பன் தவெக வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.

வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார் யார்?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி), சேகர்பாபு (சென்னை துறைமுகம்), எ.வ.வேலு (திருவண்ணாமலை), சிவசங்கர் (குன்னம்), கே.என்.நேரு (திருச்சி மேற்கு), சி.வீ.மெய்யநாதன் (ஆலங்குடி), எஸ்.ரகுபதி (திருமயம்), கோவி. செழியன் (திருவிடைமருதூர்), சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), இ.பெரியசாமி (ஆத்தூர்), ராஜ கண்ணப்பன் (முதுகுளத்தூர்), சாத்தூர் ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), சி.வெ. கணேசன் (திட்டக்குடி), எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி) ஆகியோர் வெற்றி பெற்ற அமைச்சர்கள் ஆவர்.

திமுகவின் கோட்டையான சென்னையைத் தகர்த்த தவெக

சென்னையில் உள்ள 16 தொகுதிகள் ஒவ்வொரு கட்சிக்கும் முக்கியமான தொகுதிகளாகப் பார்க்கப்படுவதுண்டு. அந்த வகையில், இதுவரையில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள் எப்போதெல்லாம் ஆட்சியில் அமருகின்றனரோ? அப்போதெல்லாம் சென்னையின் இந்த 16 தொகுதிகளிலும் அதிக இடங்களை தக்க வைத்து கோட்டை என்று நிரூபிப்பார்கள்.

அதன்படி, 2026 தேர்தலில் யார் சென்னையை தங்கள் கோட்டையாக தக்க வைக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஆளுங்கட்சியாக இருந்த திமுக கைப்பற்றுமா? அல்லது அதிமுக தட்டிப்பறக்குமா? என்றெல்லாம் பேச்சு எழுந்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தத் தேர்தலில் சூறாவளியாக வந்த தவெக துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தவிர்த்து எஞ்சிய 14 தொகுதிகளையும் வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். சென்னையை தங்கள் கோட்டையாக மாற்றியுள்ளது தவெக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *