Skip to content

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்; முடிவுகள் வெவ்வேறாக இருப்பதால் குழப்பத்தில் அரசியல் தலைவர்கள்!

சென்னை,ஏப்.30; 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. வரும் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவியது.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நிலவிய கடும் போட்டியால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

5 மாநில தேர்தல்கள் முடிந்தவுடன் நேற்று வெளியானது கருத்துக் கணிப்புகள்

இதுபோன்ற சூழலில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (ஏப்ரல் 29, 2026) மாலை முடிந்ததை அடுத்து, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) வெளியாகி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒரு விதமான முடிவை அறிவித்துள்ளதால், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முடிவுகள் மிகவும் மாறுபட்டதாக உள்ளன.

யாருக்கு வெற்றி? நிறுவனங்களின் கணிப்புகள்

வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள முடிவுகள் பின்வருமாறு:

திமுக முன்னிலை: என்டிடிவி, மேட்ரிஸ், ரிபப்ளிக் பி மார்க், சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளன.

அதிமுக வெற்றி: வோட் வைப், டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்என் நியூஸ் 18 ஆகிய 3 நிறுவனங்கள் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் (TVK): இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.

தலை சுற்றும் அரசியல் தலைவர்கள்

ஒரே மாதிரியான முடிவுகள் வராமல், ஒவ்வொரு கணிப்பும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் ல் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர். திமுக தரப்பு “வெற்றி நமதே” என்று நம்பிக்கையுடன் இருந்தாலும், அதிமுக மற்றும் தவெக தொண்டர்களும் தங்கள் கட்சிதான் வெற்றி பெறும் என்று உறுதியாகக் கூறி வருகின்றனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டபோது திமுக கூட்டணிக்கு சாதகமான சூழல் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் உளவுத்துறை அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அறிக்கை அளித்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், வாக்குப்பதிவுக்குப் பின்னர் சூழல் தவெகவிற்கு சாதகமாக இருப்பதாகப் பேசப்பட்டது. இந்த மாறுபட்ட கருத்துக் கணிப்புகள் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

மே 4-ல் தெரிந்துவிடும் உண்மை!

தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், மக்களின் உண்மையான தீர்ப்பு வாக்குப்பெட்டிகளுக்குள் (EVM) முடக்கப்பட்டுள்ளது. வருகிற 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்று மதியத்திற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது உறுதியாகிவிடும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் அரசியல் களத்தில் தொடர்ந்து சூடு

கருத்துக்கணிப்புகள் என்பது ஒரு கணிப்பு மட்டுமே, அதுவே இறுதி முடிவு அல்ல. தேர்தலில் மக்களின் மனநிலை என்ன, தற்போதைய ஆட்சி தொடருமா அல்லது புதிய மாற்றம் மலருமா? என்பதற்கு மே 4-ஆம் தேதி விடை கிடைக்கும். அதுவரை அரசியல் களம் இந்த ‘எக்ஸிட் போல்’ குழப்பங்களோடு சூடாகவே இருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *