Skip to content

தேர்தல் பரப்புரை நாளை ஓய்கிறது; இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் மும்முரம்!

சென்னை,ஏப்.20; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இம்முறை 100% வாக்கு விழக்காட்டை எட்டுவதற்கு தேர்தல் ஆணையம் தேவையான விழிப்புணர்வு பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.

தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

தேர்தல் நெருங்கிவிட்டதால், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் வீதி வீதியாக பரப்புரை நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நாளை மாலை ஓய்கிறது அனல் பறக்கும் பரப்புரை

கொளுத்தும் வெயிலையும் மிஞ்சும் அளவுக்கு அவர்களது பரப்புரையில் அனல் பறக்கிறது.
இதனிடையே, அரசியல் கட்சிகளின் பரப்புரை நாளை மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்கிறார். அதேபோன்று எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், விஜய் சென்னை நந்தனத்திலும் பரப்புரை நிறைவு செய்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள்

தேர்தல் பரப்புரை ஓய்ந்தவுடன், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் தொடங்கவிருக்கிறது. வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவை முன்னிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

நாளை மாலை 5 மணிக்குப் பிறகு தொகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளியாட்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? மே 4-ல் விடை

தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் இந்தத் தேர்தல் களம் மிகக் கடுமையான போட்டியைச் சந்தித்து வருகிறது. நாளை பரப்புரை நிறைவடைவதைத் தொடர்ந்து, களத்தில் உள்ள வேட்பாளர்களின் தலைவிதி வாக்காளர்களின் கைகளில் ஒப்படைக்கப்படும்.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *