சென்னை,மார்ச்.02; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீது பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
கூட்டணிக்காகக் காத்திருக்கும் திமுக
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தற்போது தேர்தல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “தோல்வி பயம் காரணமாகவே, கண்ணில் படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் ஸ்டாலின் சேர்த்து வருகிறார். திமுக என்ற கட்சியே இப்போது மாற்று கட்சியினரால் நிரம்பியுள்ளது” என்று வானதி சாடியுள்ளார். இதனால் நீண்டகாலமாக திமுகவில் இருக்கும் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கும்பாபிஷேகப் பணிகளும் நிதி விவகாரமும்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 4,000-க்கும் அதிகமான கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக முதலமைச்சர் கூறுவது பொய் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். “எந்த ஒரு கும்பாபிஷேகமும் திமுக அரசின் பணத்திலோ அல்லது அறநிலையத் துறை நிதியிலோ நடக்கவில்லை. இவை அனைத்தும் பக்தர்களின் பணத்திலும், கோயில் வருவாயிலும் மட்டுமே நடைபெறுகின்றன. வருமானம் இல்லாத கோயில்களில் திருப்பணிகள் செய்ய அனுமதி கேட்டால் லஞ்சம் கேட்கப்படுகிறது” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ அரசியல்
மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 90 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர் இதனைத் தனது அரசின் சாதனையாகக் கூறி வருவதாக வானதி விமர்சித்துள்ளார். “மோடி அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர திமுக அரசு எதையும் செய்யவில்லை. புற்றுநோய் தடுப்பூசி திட்டம் முதல் குடிநீர் இணைப்பு வரை அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களே” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு சிக்கல்
திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவடையாததைச் சுட்டிக்காட்டிய வானதி, “விஜய்யைக் காட்டி திமுகவை காங்கிரஸ் மிரட்டி வருகிறது. காங்கிரஸின் ஒரு சில சதவீத வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற பலவீனமான நிலையில்தான் திமுக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“சிறுபான்மையினர் வாக்குகளுக்காக இந்துக்களை இழிவுபடுத்துகின்றனர்”
திமுக அரசு பொய்களைப் பரப்புவதாகவும், சிறுபான்மை வாக்குகளுக்காக இந்துக்களை இழிவுபடுத்துவதாகவும் வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார். 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும், திமுகவின் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
