சென்னை,மார்ச்.29; நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் பெரம்பூர் தொகுதியில் ஒரு இடைத்தேர்தல் உள்பட 17 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது.
இதில் திமுக 9 முறை வெற்றிபெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன
சத்தியவாணி முத்து, கே.மகேந்திரன் போன்றோர் வென்ற தொகுதி
திமுக ஆரம்பித்த காலந்தொட்டே அக்கட்சியில் பயணித்த சத்தியவாணி முத்து இத்தொகுதியிலிருந்து இருமுறை சட்டப்பேரவைக்குத் தேர்வானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கே. மகேந்திரன் இரண்டு முறை வென்றுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பூர் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வெற்றிவேல், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவைப் திரும்பப் பெற்று, டிடிவி தினகரனின் ஆதரவாளரானார்.
2019 இடைத்தேர்தலில் வென்ற திமுகவின் ஆர்.டி. சேகர்
பின்னர் சபாநாயகர் தனபாலால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் வெற்றிவேலும் ஒருவர். இதன் தொடர்ச்சியாக 2019-ல் பெரம்பூரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவின் ஆர்.டி. சேகர் வெற்றி பெற்றார்.
2021ஆம் ஆண்டு தேர்தலில் ஆர்.டி.சேகர் சுமார் 1,05,000 வாக்குகள் பெற்று, 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.
இவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக கூட்டணி வேட்பாளரும் பெருந்தலைவர் காமராஜர் கட்சியின் தலைவருமான என்.ஆர். தனபாலனுக்கு 50,000 வாக்குகள் கிடைத்தன.
பட்டியலினத்தவர், வடமாநிலத்தவர் கணிசமாக உள்ள தொகுதி
கொடுங்கையூர், கண்ணதாசன்நகர், மகாகவி பாரதியார் நகர், எம்.ஆர்.நகர், முத்தமிழ் நகர், சர்மா நகர், பி.வி.காலனி, எருக்கஞ்சேரி, மூலக்கடை, வியாசர்பாடி, சத்தியமூர்த்திநகர், முல்லைநகர், கணேசபுரம் ஆகிய பகுதிகள் பெரம்பூர் தொகுதியில் அடங்கியுள்ளன.
நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் கணிசமாக இருந்தாலும் இத்தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு பட்டியலின மக்கள் அதிகளவில் உள்ளனர். வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பின்னர் பெரம்பூர் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியானது. இங்கு சுமார் 2,23,000 வாக்காளர்கள் உள்ளனர்.
பட்டியலின, இளைய தலைமுறையினர் வாக்கு விஜய்க்கு…?
தவெக தலைவர் விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், இளைய தலைமுறையினரின் வாக்கு அவருக்கு பெருமளவில் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. பட்டியலினத்தவரின் வாக்குகளும் விஜய்க்கு அதிகம் விழும் என்று நம்பப்படுகிறது.
அதிமுக போட்டியிடாமல் பாமகவுக்கு ஒதுக்கியது ஏன்?
அதிமுகவைப் பொறுத்தவரையில், தொகுதியில் செல்வாக்கு பெற்ற நபரான சேவியருக்கு சீட் கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உள்கட்டமைப்பும் செல்வாக்கும் இல்லாத பாமகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அதிமுகவினர் சோர்ந்து போய்விட்டனர்.
சேவியர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் கிறிஸ்தவர்கள் மற்றும் பர்மா தமிழர்களின் 40,000 வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்திருக்கும் என்று கூறுகின்றனர்.
அதிமுக ஆதரவு வாக்குகளை விஜய்க்கு திருப்பிவிட உள்ளடி வேலை?
பாமகவிற்கு ஒதுக்கினால் அக்கட்சிக்கு கிறிஸ்தவ மக்கள் வாக்குகள் செல்லாது என்பதை உணர்ந்து அந்த வாக்குகளை விஜய்க்கு திருப்பிவிடும் நோக்கில் உள்குத்து நடந்திருக்கக்கூடும் என்று விவரம் அறிந்தவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
குள்ளநரித்தனம் மூலம் அதிமுகவை போட்டியிட விடாமல் செய்து பெரம்பூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்க வைத்துள்ளனர் என்று அரசியலை உற்றுநோக்குபவர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் விஜய்யின் வெற்றியை எளிதாக்க முடியும் என்று அவர்கள் கணக்கிட்டுள்ளனர். இதன் பின்னணியில் பெரிய சக்திகள் இருப்பதாகப் பேசப்படுகிறது.
திமுகவுக்கு சாதகமாக பல அம்சங்கள் உள்ளன
திமுகவைப் பொறுத்தவரையில், தற்போதைய எம்எல்ஏவான ஆர்.டி.சேகர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். 1988ல் எழும்பூர் மாணவரணி அமைப்பாளர், அதன்பின் வடசென்னை திமுக மாணவரணி அமைப்பாளர், தொடர்ந்து வட சென்னை இளைஞரணி அமைப்பு செயலாளர் என கட்சியில் பல பொறுப்புகளில் இருந்தவர்.
திமுகவின் உள்கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் பலம், அரசின் நலத்திட்டங்கள், வடசென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் போன்றவை ஆர்.டி. சேகருக்கு கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
வெற்றிக்கனியை தட்டிப்பறிப்பது யாருக்கும் எளிதல்ல!
கூட்டணி கணக்குகள், சமுதாய வாக்குகள், கட்சி பலம், வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, ஆளும் அரசின் செயல்பாடுகள், உள்குத்து மற்றும் குழிபறிக்கும் வேலைகள் இவற்றையெல்லாம் கடந்து ஒருவர் வெற்றிக்கனியைப் பறிப்பது எளிதல்ல.
மொத்தத்தில், பெரம்பூர் தொகுதியில் தற்போதைய சூழலில் திமுகவின் கையே சற்று ஓங்கியிருப்பதாக பேசப்படுகிறது. விஜய் கட்சி சோதிக்கப்படாத கட்சியாக இருப்பதால், பல்வேறு காரணிகளையும் கடந்து எவ்வளவு வாக்குகளைப் பெறும் என்பது யாரும் கணிக்க முடியாதது.
மொத்தத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய் அடிக்கடி கூறுவது பெரம்பூரில் நடக்க வாய்ப்பண்டு.
