Skip to content

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது விஜய்யின் தவெக அரசு; 144 எம்எல்ஏக்கள் ஆதரவு; எதிர்ப்பு 22; திமுக வெளிநடப்பு!

சென்னை, மே.13; மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13, 2026) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அரசமைத்த தவெக

தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது.

இன்றைக்குள் (மே 13, புதன்கிழமை) சட்டப்பேரவைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டார்.

காலை அவை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம்

அதன்படி, சட்டப்பேரவை இன்று (மே 13, 2026) காலை கூடியதும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதலமைச்சர் என்ற முறையில் விஜய் முன்மொழிந்தார்.
அதன் மீதான விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது.
உறுப்பினர்களை எண்ணிக் கணக்கெடுக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

திமுக வெளிநடப்பு; அவையின் நுழைவுவாயில்களை மூடி வாக்கெடுப்பு

வெளியில் சென்ற எம்எல்ஏக்களை அவைக்கு அழைக்கும் வகையில் 3 முறை மணி ஒலிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பில் ஈடுபட்டனர். பின்னர் பேரவையின் நுழைவுவாயில்கள் அனைத்தையும் மூடுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். கதவுகள் மூடப்பட்டதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது அவையில் 171 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்கு, 22 உறுப்பினர்கள் எதிர்ப்பு

நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 22 எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்தனர். 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதையடுத்து நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்த தவெக அரசு

144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

பின்னர் இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

தூய சக்தி தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது: உதயநிதி

அதில், தமிழ்நாட்டு மக்களில் 65 விழுக்காடு வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தூயசக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது;

மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்யாமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது; இதன் காரணமாக, வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது;

மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், ‘sofa’ அரசியலை அரங்கேற்றும் தவெக அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரை நிகழ்த்தினோம் என்று, தனது எக்ஸ் தளப் பதிவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *