எம்ஜிஆர் அதிமுக எனும் இயக்கம் கண்டபோது, திமுகவிலிருந்து பல தலைவர்கள் விலகி அவருடன் இணைந்தனர். ஆனால், அது மாதிரி எதுவும் இல்லாமலேயே தவெக வரலாறு படைத்துள்ளது.
திமுகவை அண்ணா தொடங்கிய காலத்திலிருந்து அக்கட்சியில் இணைந்து பயணித்த எம்ஜிஆர், பின்னர் மு.கருணாநிதியால் வெளியேற்றப்பட்டதை அடுத்து, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவைத் தொடங்கினார்.
திமுகவிலிருந்து விலகி எம்ஜிஆருடன் இணைந்த தலைவர்கள்
அப்போது பல தலைவர்கள் திமுகவிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், நாஞ்சில் மனோகரன், ப.உ.சண்முகம், எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.கிருஷ்ணசாமி, கா.காளிமுத்து என பல பெரும் தலைவர்கள் அதிமுகவில் இணைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
எம்ஜிஆர் திமுகவில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்ததால், அவருடன் பலர் நெருக்கமாக இருந்தனர். அதன் காரணமாகவே அவர் அதிமுக எனும் இயக்கம் கண்டபோது, ஏராளமான தலைவர்கள் இணைந்து பயணித்தனர்.
ஐந்து ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார் எம்ஜிஆர்
கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதன்முறையாக எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார்.
முதல் தேர்தலிலேயே சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் அதிமுக போட்டியிட்டது. அப்போது அதிமுக கூட்டணி 144 தொகுதிகளில் வென்றது. இதில் அதிமுக வென்ற தொகுதி 130ஆகும்.
அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட திமுக 48 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரசுக்கு 32 தொகுதிகள் கிடைத்தன.
எம்ஜிஆரைப் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி!
எம்ஜிஆர் பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிகுந்த வெற்றிக்குப் பின்னர், அதுபோன்ற ஒரு வெற்றியை தவெக தலைவர் விஜய் தற்போது பெற்றிருப்பதாக பார்க்கப்படுகிறது.
எம்ஜிஆர் கட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்தார் என்றால், விஜய் கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
கட்சி தொடங்கிய சில மாதங்களுக்குப் பின்னர் நாஞ்சில் சம்பத், செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் போன்ற சில தலைவர்கள் தவெகவில் இணைந்தனர். இவர்கள் யாரும் பெரிய ஆளுமை மிக்கவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், தவெக வெற்றிக் கனியைப் பறித்துள்ளது.
1977ல் எம்ஜிஆர் கூட்டணி அமைத்தார்; விஜய் தனித்துப்போட்டி
முதல் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து களம் கண்டது. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டது.
1977-ல் அதிமுக வென்ற இடங்கள் 130. 2026-ல் தவெக சுமார் 110 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எம்ஜிஆர் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தபோது அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் சுமார் 30 விழுக்காடு. ஆனால், விஜய்யின் தவெகவிற்கு சுமார் 38 விழுக்காடு வாக்குகள் கிடைத்திருக்கிறது.
எனவே, எம்ஜிஆருக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவராக பார்க்கப்படுகிறார் விஜய்.
