சென்னை,மே.03: தமிழ்நாட்டில் ‘ அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் நாளை (மே 4, 2026) தொடங்குகிறது. மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும் கத்திரி வெயில் காலத்தின்போது வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 25 நாட்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை வெயில் – முக்கிய வழிகாட்டுதல்கள்
- செய்ய வேண்டியவை (பாதுகாப்பு முறைகள்): நீர்ச்சத்து மேலாண்மை: தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். மோர், இளநீர், நன்னாரி சர்பத் மற்றும் பழச்சாறுகள் போன்ற இயற்கை பானங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நலம்.
உணவு முறை: காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆடைகள் விசயத்தில் கவனம்: உடல் வெப்பத்தைத் தணிக்கவும், வியர்வையை உறிஞ்சவும் மெல்லிய பருத்தி (Cotton) ஆடைகளை மட்டுமே அணிவது நலம்.
பயணம்: மதிய நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் குடை, தொப்பி மற்றும் காலணிகள் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
- செய்யக் கூடாதவை (தவிர்க்க வேண்டியவை): உச்சக்கட்ட வெயில்: நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடி வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இது உடல் சோர்வு மற்றும் மயக்கத்தைத் தடுக்கும்.
சரும நோய்கள் வர வாய்ப்பு-எச்சரிக்கும் மருத்துவர்கள்
“அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத் தாக்கம் காரணமாகச் சரும நோய்கள் மற்றும் அம்மை நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, தினமும் இருமுறை குளிப்பதுடன், உடல் சூட்டைத் தணிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மதிய நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்” என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பறவைகள் மற்றும் விலங்களுக்கும் தண்ணீர் வைக்கலாமே !
மேலும், மனிதர்களைப் போலவே பறவைகள் மற்றும் விலங்குகளும் நீர் தாகத்தால் தவிக்கும் என்பதால், வீட்டின் மொட்டை மாடி அல்லது திறந்தவெளியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அக்னி நட்சத்திரம் நாளை (மே 4, 2026) தொடங்குவதால், அடுத்த மூன்று வாரங்களுக்குத் தமிழ்நாட்டில் வெப்பத்தின் அளவு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாகப் பெய்யும்
வானிலையைப் பொருத்தவரையில், தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட குறைவாக பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
சூப்பர் எல் நினோ நிகழ்வால் இயல்புக்கு மாறாக ஆகஸ்ட் வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஒருவாரத்திற்கு முன்னதாக மே 23 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
வெப்பச்சலனத்தால் மழை பெய்து வெயில் கட்டுப்பட வாய்ப்பு
பருவமழை முன்னதாக தொடங்கினாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை அளவு இயல்பைவிட குறைவாகவே பதிவாகும்.
தமிழ்நாட்டில் சராசரியாக 33 செமீ பருவமழை இந்தாண்டு குறைவாகவே பதிவாகும்.
கத்திரி வெயில் காலத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெயில் கட்டுக்குள் இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
