Skip to content

“நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?” – பிடிஆருக்கு சுந்தர் சி சரமாரி கேள்வி!

மதுரை,ஏப்.14; மதுரை மத்திய தொகுதியில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி, திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, அவரது நிர்வாகத் திறன் மற்றும் தனிநபர் விமர்சனங்கள் குறித்து சுந்தர் சி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

சாதனையா? சாதாரணப் பணியா?

பழனிவேல் தியாகராஜன் தனது சாதனைகளாக கழிப்பறைகள் மற்றும் ரேஷன் கடைகள் கட்டியதைச் சொல்வதை சுந்தர் சி விமர்சித்தார். “ஒரு அமைச்சரின் சாதனையா இது? இவையெல்லாம் ஒரு வார்டு கவுன்சிலர் செய்ய வேண்டிய பணிகள். உலகத்தரம் வாய்ந்த மீனாட்சியம்மன் கோயில் இருக்கும் இந்தத் தொகுதிக்கு, ஒரு அமைச்சராகப் பெரிய அளவில் எதையும் செய்யாதது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நிதியமைச்சர் பதவி பறிப்பு குறித்து கேள்வி

தன்னை ‘படித்தவர்’ என்று தற்பெருமை பேசும் பிடிஆரை நோக்கி, “நீங்கள் அவ்வளவு தகுதியானவர் என்றால், உங்களை ஏன் முக்கியமான நிதியமைச்சர் பதவியிலிருந்து தூக்கி சாதாரணத் துறைக்கு மாற்றினார்கள்? உங்கள் தகுதியில் முதலமைச்சருக்கே சந்தேகம் வந்துவிட்டதா?” என்று சுந்தர் சி வினவினார்.

தனிநபர் விமர்சனங்களுக்குப் பதிலடி

தன்னை ‘கூத்தாடி’ என்றும் ‘சினிமா சங்கி’ என்றும் விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த அவர், “சினிமாவில் இருந்துதான் உங்கள் துணை முதல்வர் உதயநிதியும் அரசியலுக்கு வந்தார். தைரியம் இருந்தால் அவரைப் பார்த்து ‘கூத்தாடி’ என்று சொல்லுங்கள். படிப்பு மட்டுமே ஒருவரின் தகுதியைத் தீர்மானிக்காது, செயல்பாடுகளே முக்கியம். காமராஜர், எம்.ஜி.ஆர் முதல் உங்கள் தலைவர் கருணாநிதி வரை மக்கள் பணியால் தான் உயர்ந்தார்கள்” என்று பேசினார்.

மாநகராட்சி முறைகேடு புகார்கள்

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு மற்றும் அதில் தொடர்புடைய நபர்களுக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும், தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்தும் பகிரங்கமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுந்தர் சி வலியுறுத்தினார்.

மாற்றத்திற்கான நேரம்

“ஒரு பாரம்பரிய குடும்பத்திற்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தது போதும். இப்போது மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறிய சுந்தர் சி, மதுரை மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திணறுவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *