டெல்லி,மே.18; மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான (NEET UG 2026) வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மே 3ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, தேசிய தேர்வு முகமை (NTA) இந்தத் தேர்வை ரத்து செய்தது. தற்போது இது தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பா சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, தங்களது பிள்ளைகளுக்காகப் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கசிந்த வினாத்தாளை வாங்கிய பெற்றோர்களை சிபிஐ அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
வினாத்தாள் கசிந்தது எப்படி? சிபிஐ அம்பலப்படுத்திய திடுக் தகவல்கள்
சிபிஐ நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், இந்த வினாத்தாள் கசிவுப் பின்னணியில் மாநிலங்கள் கடந்த ஒரு மாபெரும் நெட்வொர்க் செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புனேவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவர் மூலமாக வினாத்தாளின் நகல் பெறப்பட்டு, அது கூரியர் மூலமாக நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார் என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் அதனை புகைப்படம் எடுத்து குருகிராமில் உள்ள யாஷ் யாதவ் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
அங்கிருந்து இந்த வினாத்தாள் நகல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிவால் குடும்பத்திற்குச் சென்றுள்ளது. தினேஷ் பிவால் என்பவர் இந்த வினாத்தாளைக் கைகளால் எழுதி, பின்னர் அதனை ஸ்கேன் செய்து பிடிஎஃப் (PDF) கோப்பாக மாற்றியுள்ளார். இந்த பிடிஎஃப் கோப்புகள் தான் ராஜஸ்தான் சிகார் (Sikar) பகுதியில் உள்ள பல்வேறு பயிற்சி மைய மாணவர்களுக்குப் பகிரப்பட்டுள்ளன.
ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பேரம்!
இந்த மோசடி நெட்வொர்க்கில் சிக்கிய பல மாணவர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் தங்களது வாக்குமூலத்தை அளித்துள்ளனர். கசிந்த வினாத்தாளைப் பெறுவதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தரப்பில் இருந்து இடைத்தரகர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள பணப் பரிமாற்றங்கள் (Money Trail), மொபைல் சாட்டிங் மற்றும் லேப்டாப் தரவுகளைச் சோதித்த பீகார் போலீசாரும் டிஜிட்டல் ஆதாரங்களைக் கைப்பற்றி சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தில் சிக்கிய முக்கியப் புள்ளிகள்
இந்த விவகாரத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிவால் குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ் பிவால், அவரது சகோதரர் மங்கி லால் பிவால் மற்றும் மங்கி லாலின் மகன் விகாஸ் பிவால் ஆகிய மூவர் உட்பட 5 பேரை சிபிஐ அதிரடியாகக் கைது செய்துள்ளது. இவர்களை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லிக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தினேஷ் பிவால் தனது மகனுக்காகவே இந்த வினாத்தாளை முதலில் வாங்கியுள்ளார் என்பதும், பின்னர் இது பலருக்கு விற்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வினாத்தாளை விலை கொடுத்து வாங்கியோர் மீதும் நடவடிக்கை
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக சுமார் 23 லட்சம் மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் முறைகேடாக வினாத்தாளை வாங்கிய பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் மறு தேர்வு அடுத்த (ஜூன்) மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முறைகளில் இன்னும் வெளிப்படைத்தன்மையும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாணவர் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
