டாக்கா,மார்ச்.28; நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி (KP Sharma Oli) மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் (Ramesh Lekhak) ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். புதிய பிரதமர் பலேன் ஷா (Balen Shah) பதவியேற்ற அடுத்த நாளே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைதின் பின்னணி: ‘ஜென் ஜி’ (Gen Z) போராட்டங்கள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் ஊழல்கள் மற்றும் YouTube, Facebook, WhatsApp உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு அரசு விதித்த திடீர் தடை ஆகியவற்றுக்கு எதிராக இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெனரேஷன் இசட் (Gen Z) இளைஞர்கள் நடத்திய இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 75-க்கும் அதிகமானோர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர். இதன் எதிரொலியாக பிரதமர் கே.பி. சர்மா ஒளி பதவி விலகினார்.
விசாரணை ஆணைய அறிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை
வன்முறை தொடர்பாக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கௌரி பகதூர் கார்க்கி தலைமையிலான விசாரணைக் குழு, இந்தப் படுகொலைகளுக்கு அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒளி மற்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் ஆகியோரின் அஜாக்கிரதையே காரணம் என அறிக்கை சமர்ப்பித்தது.
அவர்கள் மீது ‘குற்றவியல் அலட்சியம்’ (Criminal Negligence) மற்றும் ‘மரணம் விளைவிக்கும் குற்றம்’ (Culpable Homicide) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 28, 2026) அதிகாலை பக்தபூரில் உள்ள கே.பி. சர்மா ஒளி மற்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் ஆகியோரின் இல்லங்களில் வைத்து அவர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் காவலில் எடுத்தனர்.
சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை: புதிய அரசு
கைது நடவடிக்கைக்குப் பிறகு பேசிய தற்போதைய உள்துறை அமைச்சர் சுதன் குருங், “வாக்குறுதி என்பது வாக்குறுதிதான். சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை. இது யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இது நீதிக்கான ஆரம்பம்” என்று தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் பலேன் ஷா தலைமையிலான அமைச்சரவை, பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே இந்தக் கொலை வழக்குகளை விசாரிக்கவும், விசாரணை அறிக்கையை அமல்படுத்தவும் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
கே.பி. சர்மா ஒளியின் பதில்
தனது கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள கே.பி. சர்மா ஒளி, இது புதிய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் கூறியுள்ளார். தற்போது அவர் காத்மாண்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
சர்மா ஒளி கைது- உற்றுநோக்கும் தெற்காசியா
நேபாள வரலாற்றில் முதல்முறையாக முன்னாள் பிரதமர் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது தெற்காசிய அரசியலில் உற்று நோக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது. பலேன் ஷா தலைமையிலான புதிய ஆட்சி, ஊழல் மற்றும் கடந்த கால அநீதிகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
