நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்துவதுதான் மத்திய பாஜக அரசின் நோக்கம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். டெல்லியில் இன்று (06.12.2025) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனியா காந்தி, மத்தியில் ஆளும் பாஜக அரசின் நோக்கம், ஜவஹர்லால் நேருவின் பெயரை அழிப்பது மட்டுமல்ல, “நம் தேசத்தின் அடித்தளமாகக் கட்டமைக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களை அழிப்பதே” என்று விமர்சித்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேரு பாபர் மசூதிக்கு பொதுநிதியைப் பயன்படுத்த விரும்பியதாகவும், ஆனால், வல்லபாய் படேல் அதனைத் தடுத்ததாகவும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேருவை தரக்குறைவாக சித்தரிக்க, சிதைக்க, இழிவுபடுத்த, அவதூறு செய்வதற்கான அனைத்தையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் செய்வதாக சோனியா சாடினார். நேருவின் பங்களிப்புகள் குறித்து விமர்சனம் செய்யலாம் – ஏன் பகுப்பாய்வு கூட செய்யலாம், ஆனால், அவரது பன்முகத்தன்மை வாய்ந்த மரபை, வரலாற்றைத் திருத்தி எழுதும் ஒரு முரட்டுத்தனமான மற்றும் சுயநல முயற்சியாக இருக்கக்கூடாது என்று சோனியா வலியுறுத்தினார். நேருவின் வரலாற்றை அழிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்குப் பின்னால் உள்ள சக்திகள், இந்திய சுதந்திரப் போராட்டத்திலோ அல்லது அரசியலமைப்பு உருவாக்கத்திலோ எந்தப் பங்கும் வகிக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த சித்தாந்தம், மகாத்மா காந்தியின் படுகொலைக்கு வழிவகுத்த வெறுப்புச் சூழ்நிலையைத் தூண்டியது என்றும், இதன் அணுகுமுறை பழமைவாத மற்றும் கொடூரமான வகுப்புவாத நோக்குடையது என்றும் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார்.
நேருவை இழிவுபடுத்தும் பாஜக: சோனியா குற்றச்சாட்டு
