Skip to content

“பதவிக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்” – திருமாவளவன் அதிரடி விமர்சனம்!

கல்பாக்கம்,ஏப்.13; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரைா மேற்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுக கூட்டணி குறித்து முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜய்யின் அரசியல் வருகை: சேவைக்கா? பதவிக்கா?

பிரசாரத்தின் போது பேசிய திருமாவளவன், நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்துக் காட்டமாக விமர்சித்தார். “இங்கே ஒரு நடிகர் இருக்கிறார். கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆயிரக்கணக்கான கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்கள் சேவை செய்ய வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல; அவர் பதவிக்காக மட்டுமே அரசியலுக்கு வந்திருக்கிறார்” என்று அவர் விமர்சித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பிடிப்பு

கூட்டணி குறித்த விவாதங்களுக்குப் பதிலளித்த அவர், “விடுதலை சிறுத்தைகள் கட்சி நினைத்திருந்தால் பல கட்சிகளுடன் பேசி அதிக இடங்களைப் பெற்றிருக்க முடியும்; ஆனால், நாங்கள் கொள்கை பிடிப்புடன் திமுக கூட்டணியில் நீடிக்கிறோம்; அதிமுக மற்றும் திமுக என இரு தரப்பிலும் பேரம் பேசியிருந்தால் எங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்திருக்கும். ஆனால், கொள்கைக்காக அந்த வாய்ப்புகளைத் தவிர்த்தோம்” எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக குறித்த எச்சரிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய திருமாவளவன், “கடந்த மூன்று ஆண்டுகளாக அதிமுக-வுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்தன; நான் அதிமுக-வுடன் கூட்டணி வைத்திருந்தால், எடப்பாடி பழனிசாமி பாஜக-வுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார்; தேர்தல் களமே மாறியிருக்கும்” என்று கூறினார்.

மேலும், “தவறுதலாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனால், அடுத்த இரண்டு மாதங்களிலேயே அவரது பதவி பறிக்கப்படும்; அவருக்குப் பதில் எச். ராஜா, அண்ணாமலை அல்லது நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவரை பாஜக முதலமைச்சராக அமர்த்தும் சூழல் உருவாகும்” என்று எச்சரித்தார்.

விசிக-வின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய திருமா

திருமாவளவனின் இந்தப் பேச்சு, வரவிருக்கும் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுதியான நிலைப்பாட்டையும், புதிய அரசியல் வருகையான விஜய்யின் மீதான அவர்களின் பார்வையையும் வெளிப்படுத்துகிறது. திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் மீதான விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், கொள்கை ரீதியான அரசியலே வெல்லும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *