சென்னை,மே.26; தமிழ்நாடு அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், அதிமுகவை சேர்ந்த 3 முக்கிய எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செய்திதான். தாராபுரம், மதுராந்தகம் மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்
கட்சி மாறிய இவர்கள், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தத்தமது தொகுதிகளில் எவ்வளவு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள் என்ற விபரங்களை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
- மதுராந்தகம் (தனி) : வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை (2021 மற்றும் 2026 தேர்தல்களில்) சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் மரகதம் குமரவேல். 2026 தேர்தலில் பெற்ற வாக்கு விபரம் பின்வருமாறு:
மரகதம் குமரவேல் (அதிமுக) – 69,284 வாக்குகள்
எழில் கேத்தரின் (தவெக) – 62,090 வாக்குகள்
அமுலு பொன்மலர் (திமுக) – 59,838 வாக்குகள்
அதிமுகவின் மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- தாராபுரம் (தனி): வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்தியபாமா. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் பெற்ற வாக்குகள் மற்றும் வெற்றி விபரம்:
சத்தியபாமா (அதிமுக ): 81,100 வாக்குகள்
டாக்டர் இந்திராணி (திமுக) : 64,373 வாக்குகள்
கௌரி சித்ரா (தவெக): 46,438 வாக்குகள்
அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
சத்தியபாமா மிக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்தி இந்தத் தொகுதியை அதிமுக வசம் தக்கவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெருந்துறை : வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியின் அதிமுக முகமாக விளங்கியவர் ஜெயக்குமார். இவர் 2021-ம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிக் கனியைப் பறித்தார்.
ஜெயக்குமார் (அதிமுக) : 70.302 வாக்குகள்
தோப்பு வெங்கடாசலம் (திமுக) : 60,609 வாக்குகள்
வி.டி.அருணாசலம் (தவெக) : 59,484 வாக்குகள்
பெருந்துறை தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார் 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பெருந்துறையில் அதிமுகவின் கோட்டையை பலப்படுத்திய ஜெயக்குமார், தற்போது தவெக-வில் இணைந்துள்ளார்.
அடுத்த கட்டம்: 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?
இந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து, அவர்கள் தங்களது பதவிகளை இழந்துள்ளனர். இதன் காரணமாக தாராபுரம் (தனி), பெருந்துறை, மதுராந்தகம் (தனி) ஆகிய 3 தொகுதிகள் தற்போது காலியாகியுள்ளன.
இதனுடன், தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து, தமிழ்நாட்டில் மொத்தம் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசியலில் தவெக-வின் எழுச்சி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் இந்த திடீர் கட்சித் தாவல் மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. கடந்த தேர்தலில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற இந்த மூன்று மக்கள் பிரதிநிதிகளும் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் வரவிருக்கும் இடைத்தேர்தல் களம், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளுக்கு இடையே கடுமையான சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
