Skip to content

பாஜகவின் புதிய உத்தியே அண்ணாமலையின் இயக்கம்: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம்

சென்னை,ஜூன்.06; அண்ணாமலை தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கும் புதிய இயக்கம் பாஜகவின் உத்தி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். திடீரென அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2020ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாஜகவில் சேர்ந்த உடனேயே மாநிலத் தலைவராக நியமனம்

பாஜகவில் பெரிய பொறுப்புக்கு வருவதாக இருந்தால், கட்சியில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு பணியாற்றியிருக்க வேண்டும் என்கிற ஒரு நடைமுறை உள்ளது.
ஆனால், பாஜகவில் சேர்ந்த சில மாதங்களிலேயே அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டதால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால், தனது அதிரடியான பேச்சுகளால் நாள்தோறும் செய்திகளில் அடிபடும் அரசியல்வாதியானார்.

ஆளுங்கட்சியை அன்றாடம் விமர்சித்ததால் ஊடக வெளிச்சம்

ஆளுங்கட்சிக்கு எதிராக அன்றாடம் அறிக்கைகள் விடத் தொடங்கியதால் அவருக்கு அதிக ஊடக வெளிச்சம் கிடைக்கத் தொடங்கியது.

2021-ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் சட்டமன்றத் தேர்தலிலும், 2024-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மூலம் மேலும் பிரபலம்

பின்னர் கட்சியை வளர்ப்பதற்காக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பெரிய அளவிலான நடைப்பயணத்தை மேற்கொண்டார். இதுபோன்ற காரணங்களால் அண்ணாமலை பாஜகவின் முகமானார்.

அப்போது அதிமுகவையும், அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வந்தார்.

2026 தேர்தலுக்கு முன் பாஜக தலைவர் பதவியிலிருந்து விலகல்

இதன் தொடர்ச்சியாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அவர் மாநில பாஜக தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

அதிமுகவுடன் பாஜக தேர்தல் கூட்டணி வைப்பதற்காக அண்ணாமலையிடம் இருந்து மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதாக பேசப்பட்டது.

இதுபோன்ற சூழலில், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் சில தினங்களுக்கு முன்னர் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக நேற்று (ஜூன் 05, 2026) அறிவித்தது.

நாம் தலைவர்கள்’ என்ற பெயரில் அண்ணாமலை இயக்கம்

இந்நிலையில், தனது எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் பேசினார். அப்போது அண்ணாமலை, அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை என்று தெரிவித்துள்ளார்.
“நான் 2020, ஆகஸ்ட் 25-ல் பாஜகவில் இணைந்தேன். தமிழ்நாட்டு மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

எனக்கு பெரிய இலக்குகள் உள்ளன: அண்ணாமலை

என்னுடைய பாதை வேறு; வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டும்; எனக்கு இலக்குகள் பெரியதாக உள்ளன; நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும்; ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இருக்கிறேன் என்பதை பாஜக தலைவர்களிடம் பண்போடு சொல்லிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளேன்.

இது தமிழர் பண்பு என்றும்கூட வைத்துக்கொள்ளலாம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தொடங்கியிருக்கும் புதிய இயக்கம் குறித்து அரசியல் கட்சியினர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

பாஜகவின் புதிய உத்தியே அண்ணாமலையின் இயக்கம்: சிபிஎம்

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாட்டில் பாஜகவின் புதிய உத்தியே அண்ணாமலையின் இயக்கம் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி. ஆர்எஸ்எஸ் ஏற்கெனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2,501 அவ்வளவுதான் என்று சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்: பெ.சண்முகம்

பாஜக என்ற கட்சி தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி – அமித் ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை என சண்முகம் சாடியுள்ளார்.

ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *