சென்னை,மார்ச்.30; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இதில் திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி, நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனியே போட்டியிடுகின்றன.
இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிற கட்சிகளுக்கு 68 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பாமகவுக்கு (அன்புமணி) 18 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. எஞ்சியிருக்கும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் அன்புமணி இன்று (மார்ச் 30,திங்கள்) வெளியிட்டார்.
பெரம்பூரில் நட்சத்திர மோதல்: திலகபாமா vs விஜய்
இந்த பட்டியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது பெரம்பூர்
தொகுதி. இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராக பாமக சார்பில் மாநிலப் பொருளாளர் திலகபாமா களம் இறக்கப்பட்டுள்ளார். பெரம்பூர் தொகுதியில் இந்த அறிவிப்பு ஒரு நட்சத்திர மோதலுக்கான களத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.
தருமபுரியில் சௌமியா அன்புமணி போட்டி
பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் தருமபுரி தொகுதியில், அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்ற அவர், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தருமபுரி தொகுதியில் களம் காண்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய வேட்பாளர்களின் பட்டியல்:
பாமக வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய வேட்பாளர்கள்:
விருத்தாசலம்: தமிழரசி ஆதிமூலம்
தருமபுரி: சௌமியா அன்புமணி
திருப்போரூர்: வழக்கறிஞர் கே. பாலு
பென்னாகரம்: பாடி வெ. செல்வம்
சேலம் வடக்கு: எஸ். சதாசிவம்
சேலம் மேற்கு: மு.கார்த்தி
விக்கிரவாண்டி: சி. சிவக்குமார்
மயிலாடுதுறை: சித்தமல்லி மு.கார்த்தி
போளூர்: சி.ஆர். பாஸ்கரன்
ஜெயங்கொண்டம் : வைத்தி
சோளிங்கர்: க. சரவணன்
உத்தரமேரூர்: பெ. மகேஷ்குமார்
ரிஷிவந்தியம்: செழியன்
முன்னதாக கீழ்வேளூர் -வடிவேல் சரவணன், அம்பத்தூர் – என்.சேகர், செஞ்சி – கணேஷ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அவருக்கு எதிராக பாமகவின் அன்பு.சோழன் நிறுத்தப்பட்டுள்ளார்.
வெற்றி வாய்ப்பு எப்படி?
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக வலுவான தொகுதிகளைப் பெற்றுள்ளதால், இம்முறை அக்கட்சி கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. குறிப்பாக, செல்வாக்கு மிக்க பெண் வேட்பாளர்களான திலகபாமா மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோரின் வருகை பாமகவின் வாக்கு வங்கியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்தல் களம் புதிய கட்சிகளின் வருகையாலும், பழைய கூட்டணிகளின் மாற்றங்களாலும் விறுவிறுப்பாகியுள்ளது. பெரம்பூர் போன்ற முக்கிய தொகுதிகளில் பாமக எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
