Skip to content

பிரதமர் மோடி இன்று நாகர்கோவில் வருகை: பிரமாண்ட ‘சாலை வலம்’ – தேர்தல் களம் சூடுபிடிப்பு!

நாகர்கோவில்,ஏப்.15; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15, புதன்) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வருகை தருகிறார்.

வருகை மற்றும் பயணத் திட்டம்

பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார். மாலை 3 மணி அளவில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்.

பிரமாண்ட ‘சாலை வலம்’ (Road Show) நிகழ்ச்சி

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் நின்றவாறு வீதி உலா வரும் பிரதமர், பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோருகிறார்.

நிகழ்வில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள்

பிரதமரின் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் பாதுகாப்பாக நின்று பிரதமரை வரவேற்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி வருகை-பாஜக கூட்டணி கட்சிகள் உற்சாகம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமரின் வருகை தென் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மாலை 6 மணி அளவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் டெல்லி திரும்புகிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *