Skip to content

புதுச்சேரியில் தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பே திமுக வேட்புமனு தாக்கல்; பிரச்னை நாளைக்குள் சரியாகும் என்று திமுக உறுதி!

புதுச்சேரி,மார்ச்.18; 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி மற்றும் என்ஆர் காங்கிரஸ்-பாஜக என இரண்டு அணிகளிடையே போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ்-திமுக தொகுதிப்பங்கீடு முடிவாகவில்லை!

வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் (மார்ச் 16, செவ்வாய்) தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி தொகுதிப் பங்கீடும் முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

புதுச்சேரியில் தலைமை தாங்க காங்கிரஸ் விருப்பம்

மேலும் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்றதுபோல, புதுச்சேரியிலும் தலைமை ஏற்க அக்கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால், தமிழ்நாட்டிற்கு திமுக தலைமை, புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைமை என்ற கோரிக்கையை புதுச்சேரி காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த தோ்தலில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் போட்டியிட்டு, காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதனால் இந்த முறை திமுக 15 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யக் கோரி காங்கிரஸிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

வேட்பாளர் நேர்காணல் நடந்து முடிந்துவிட்டது!

இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், புதுச்சேரி மாநில வேட்பாளர்கள் நோ்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (மார்ச் 17, செவ்வாய்) நடத்தி முடித்தார்.

மேலும், திமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் அனைத்திலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும், கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிப் பங்கீட்டுக்கு முன்னரே திமுக வேட்புமனு தாக்கல்!

அதன்படி புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட திமுக எம்எல்ஏவாக இருக்கும் சம்பத், மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட இன்று (மார்ச் 18,புதன்) வேட்புமனு தாக்கல் செய்தார்.

சாரம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனு தாக்கலை சம்பத் தாக்கல் செய்தார்.

தொகுதிப் பங்கீடு முடிவானதும் தலைமை சொல்வதை கேட்போம்!!

வேட்பு மனு தாக்கல் செய்ய நாட்கள் குறைவாக உள்ளதால், மனு தாக்கல் செய்துள்ளோம். தொகுதி பங்கீடு மற்றும் தொகுதி இறுதியாகும் பட்சத்தில் தலைமை என்ன சொல்கிறதோ, அதனை கேட்டு நடப்போம் என்று தெரிவித்தார்.

இதனிடையே, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் தலைமையிலான குழுவினர் கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்த வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி விரைந்துள்ளனர்.

தொகுதிப்பங்கீடு இன்றிரவு முடியும்; பிரச்னை நாளைக்குள் சரியாகும்

அவர்கள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோருடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தொடர்ந்து திமுக தலைமையை தொடர்புகொண்டு, தொகுதி எண்ணிக்கை, தொகுதியையும் முடிவு செய்கின்றனர். தொகுதி உடன்பாடு, வேட்பாளர் அறிவிப்பு இன்று இரவே வெளியாகும் என தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு பிரச்னை நாளைக்குள் முடிவுக்கு வரும் என்று புதுச்சேரி திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *