புதுச்சேரி,ஏப்.06; புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 6, திங்கள்) புதுவையில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மகளிருக்கு இலவச பேருந்து பயணம்
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டைப் போலவே அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என்ற மெகா வாக்குறுதியை ராகுல் காந்தி வழங்கினார். இது நடுத்தர மற்றும் ஏழை எளிய பெண்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்த அவர், படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், அரசு வேலைவாய்ப்புகளில் சேருவதற்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மருத்துவக் காப்பீடு மற்றும் உள்ளாட்சி தேர்தல்
மக்கள் நலன் கருதி, புதுவை மக்கள் அனைவருக்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்த ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக மீது கடும் தாக்குதல்
பரப்புரையின் போது பாஜகவை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி, “புதுவையை புதுவை மக்கள் ஆளவில்லை, எங்கோ இருந்து கொண்டு பாஜக ஆட்டிப்படைக்கிறது. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது. இங்கு நடக்கும் ஒவ்வொரு டெண்டரிலும் ஆளும் தரப்பு 30 சதவீதம் கமிஷன் பெறுகிறது” என்று பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ராகுலின் வாக்குறுதிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு ‘கை’கொடுக்குமா?
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்த வாக்குறுதிகள் இந்தியா கூட்டணிக்கு பெரும் பலத்தை அளித்துள்ளன. இலவச பேருந்து பயணம் மற்றும் இளைஞர்களுக்கான உதவித்தொகை ஆகிய அறிவிப்புகள் தேர்தல் முடிவுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
