புதுச்சேரி,ஏப்.05; புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பரப்புரை அனல் பறக்கிறது.
என்.ஆர். காங்கிரஸ்+பாஜக கூட்டணி, காங்கிரஸ் +திமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகளின் பரப்புரையால் தேர்தல் களம் அதிர்கிறது.
புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நீண்ட நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. இதன் காரணமாக, விசிக தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு, சில தொகுதிகளில் வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இருப்பினும், வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு தேசிய அளவில் காங்கிரஸ் தலைமை தலையிட்டதன் விளைவாக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டது.
உழவர்கரை தொகுதி மட்டுமே விசிக-விற்கு ஒதுக்கீடு
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் முடிவில், புதுச்சேரியில் உழவர்கரை தொகுதி மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே விசிக சார்பில் ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் ஆகிய தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 5, ஞாயிறு) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி, உழவர்கரை தொகுதியில் மட்டும் விசிக போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.
ஏனைய ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்தாலும், விசிகவினர் அங்குள்ள கூட்டணி வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளுக்காக வாக்கு சேகரிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலக முடியாவிட்டாலும், அவர்கள் அந்தத் தொகுதிகளில் தங்களுக்குப் பதில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவே வாக்கு சேகரிப்பார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என்பது புலனாகிறது.
திருமாவளவனின் கோரிக்கை அரிதான நிகழ்வு!
தேர்தல் களத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்படும் சிக்கல்கள் சகஜம் என்றாலும், கூட்டணி தர்மத்திற்காகத் தனது கட்சி வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டாம் என்று ஒரு தலைவர் கோரிக்கை விடுப்பது அரிதான நிகழ்வாகும். திருமாவளவனின் இந்த முடிவு புதுச்சேரி தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணியின் பலத்தை அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
